23
November, 2026

A News 365Times Venture

23
Monday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம்: "தீபம் ஏற்றாவிட்டால், தவெக அரசைக் கலைக்க வேண்டும்!" – எச்சரிக்கும் இந்து முன்னணி

Date:

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா அல்லது கடந்த காலத்தைப்போல் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நிலை ஏற்பட்டுவிடுமா… என்ற திக் திக் சூழ்நிலை நிலவி வருகிறது!

‘கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24-ம் தேதி (நாளை), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம்’ என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்திருக்கிறது. கூடவே கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது.

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறையை மாற்றுவது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்’ என அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மேலும், ‘சர்ச்சைக்குரிய கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்’ எனவும் வாதிடப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம்

அதனால், ‘நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்து, இறுதி விசாரணை முடியும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது’ எனவும் தமிழக அரசு கோரியிருக்கிறது.

ஆனால், கார்த்திகை தீபத் திருநாளுக்கு இன்னும் ஒருநாளே இருக்கும் நிலையில், இந்தச் சீராய்வு மனு மீதான விசாரணைதான் தற்போது பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

பொதுவாக, சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு நடைமுறைகள் இருக்கின்றன. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் இன்று ஒரே அமர்வில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கவில்லை. இதனால், தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பு அவசர முறையீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது.

உச்சநீதிமன்றம்

நாளை (நவம்பர் 24) கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்துக்கும் விடுமுறை என்பதால், அதற்குள் சீராய்வு மனு விசாரணைக்கு வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20-ம் தேதி உத்தரவின்படி, நாளை தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காகக் கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியும். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. ஊர்வலம், கூட்டம் கூடுதல், முழக்கங்கள் எழுப்புதல் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், தொல்லியல் துறையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த அனுமதி இந்த ஆண்டுக்கான ஒருமுறை ஏற்பாடு மட்டுமே என்றும், இதை எதிர்காலத்தில் ஒரு வழக்கமாகவோ உரிமையாகவோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அரசு என்ன செய்யப்போகிறது?

2007-ம் ஆண்டு தமிழக ஆட்சிப்பொறுப்பில் தி.மு.க இருந்தபோது, சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முட்டுக்கட்டைகள் உருவாகின. இதைத்தொடர்ந்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள், ‘சேதுசமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி’ முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தன.

ஆனால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பந்த்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையின்போது ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மாநில அரசு செயல்படுத்தாவிட்டால், அரசியலமைப்பு இயந்திரமே முடங்கியதாகிவிடும். அப்படியொரு சூழல் ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்’ என்றும் எச்சரித்தது. இதனால், முழு அடைப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டு, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை மட்டும் நடத்தின.

விஜய்

இந்த நிலையில், தற்போது திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், தமிழக அரசின் முன் இரண்டு முக்கியமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருபக்கம், தாங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச் செய்வது அல்லது ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவைச் செயல்படுத்துவது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சை, இந்த ஆண்டும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நாளை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு எந்த அளவுக்குச் செயல்படுத்தப்போகிறது? என்ற கேள்விகளுக்கு இப்போதுவரை தமிழக அரசுத் தரப்பிலிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை.

இந்து முன்னணி ஆவேசம்…

இதற்கிடையே இவ்விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து எதிர்த்துவரும் இந்து முன்னணி அமைப்பினர், நாளை தீபம் ஏற்றப்படுவதைக் கண்டுகளிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் கேட்டபோது,

“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை கடந்தகால தி.மு.க அரசு அமல்படுத்தவில்லை. பின்னர் இதற்காக மாவட்ட ஆட்சியரும் காவல் ஆணையரும் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டனர்.

காடேஸ்வரா சுப்பிரமணியம்

தற்போது உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக த.வெ.க அரசு, சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆக, தி.மு.க அரசு எப்படி நடந்துகொண்டதோ, அதேபோல்தான் இந்த அரசும் நடந்துகொள்கிறது. இரண்டு அரசுகளுமே இந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றன. தி.மு.க-வைவிட இவர்கள் ஒருபடி மேலே போய் செயல்படுகிறார்கள். எனவே, இந்த அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறதா, இல்லையா என்பது நாளைக்குத்தான் தெரியும்.

நீதிமன்றம் சொல்லியிருப்பதைப் போல தீபம் ஏற்ற வேண்டும், நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் உறுதியான கோரிக்கை. இதை மக்களிடமும் கொண்டுசென்றுதான் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும். எனவே, ‘நீதிமன்றம் தீபம் ஏற்றச் சொல்லியிருக்கிறது; அதன்படி தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றப்படுவதைப் பார்க்க வாருங்கள்’ என பக்தர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

ஒருவேளை நீதிமன்ற உத்தரவை இந்த அரசு அமல்படுத்தவில்லை என்றால், த.வெ.க அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க இருக்கிறோம்” என்றார் அழுத்தமாக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'5 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால்தான் சரக்கு'- டாஸ்மாக் கடை பேடிஎம் மெஷினைத் தூக்கிக்கொண்டு ஓடிய இளைஞன்

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடை...

`இனி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல்'- தவெக அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் விவசாயிகள்!

உணவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்...

'மீனவர் நலத்துறைக்கு வேற ஆளே இல்லையா?' – அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக கொதிக்கும் மீனவர்கள்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரான ஸ்ரீநாத் தன்னுடைய துறைசார்ந்த மீனவர்களின்...

ஜீவனாம்சம் எப்போது கேட்கலாம்? கணவரும் ஜீவனாம்சம் கேட்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? – 19

“கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். வருமானமும் இல்லை. விவாகரத்து வழக்குத் தொடர்ந்தால்தான் ஜீவனாம்சம்...