‘ஆட்சி கவிழ்ப்பு’ என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்றபோது திமுக தலைவர் ஸ்டாலின், “ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள்தான் எங்களுக்கு முதலமைச்சர் என்று சொல்கிறார்கள்.
தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது” என்று பேசியிருந்தார்.
ஆட்சி கவிழ்ப்பு!
தவிர ‘தவெக ஆட்சி நீடிக்காது. விரைவில் இந்த ஆட்சி கவிழும், 50, 60 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையிலேயே தவெக ஆட்சியை கவிழ்க்க வேலைகள் நடந்துகொண்டிருக்கிறதா? இல்லை அவர்களின் நம்பிக்கையை உடைக்க சீனியர் அரசியல்வாதிகள் இப்படி பேசிக்கொண்டிருக்கின்றனரா? என்ற கேள்வியோடு பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புகொண்டோம்.
இதுதான் திமுகவின் நோக்கம்
நம்மிடம் பேசிய அவர், ” தற்போதைய சூழலில் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பே இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நிலை வரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கொண்டு செல்லாது. இத்தகைய கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசுவதன் வழியாக, தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்து, அவர்களிடையே ஒருவித சந்தேகத்தையும் கேள்விக்குறியையும் உருவாக்குவதே திமுகவின் நோக்கம்.
மேலும், இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், திமுக தனது கட்சியினரைத் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் தக்கவைத்துக் கொள்கிறது. இதற்கு உதாரணமாக, கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், தன்னை இன்னும் முதல்வர் என்றே அழைப்பதாகவும், இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்ற தொனியில் பேசியதை பார்க்க முடிந்தது.

தவெகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி
அதே நாளில், தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரியவந்ததால், வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளரைத் திமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. அதிமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறுவதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே, திராவிடக் கட்சிகளில் ஒரு ஒன்றியச் செயலாளர் நகர்வது பார்க்கப்படுகிறது.
எனவே, தங்கள் கட்சியைப் பாதுகாத்து, அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையைத் தொண்டர்களுக்கு வழங்க திமுக இந்த உத்தியைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில் கவர்ச்சியால் மக்கள் வாக்களித்துவிட்டார்கள், வாக்களித்தவர்கள் தற்போது வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று கூறிவந்த திமுக, அதன் நீட்சியாக இப்போது ஆட்சி கவிழும் என்று பேசுவதன் மூலம் தவெகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்த முயல்கிறது.
புதிய தொழில் முதலீடுகளை தடுப்பது.!
50, 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக ரகுபதி கூறுவது, அமைச்சர்கள் தவிர மற்ற அனைவரும் அதிருப்தியில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நாற்பது கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகக் கூறப்படுவது, தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி, அக்கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பில் பெரிய சேதத்தை உண்டாக்கும் என்பது திமுகவுக்குக் கிடைக்கும் மற்றொரு லாபம்.
இதுமட்டுமின்றி, ஆட்சி கவிழும் என்று தொடர்ந்து பேசுவதன் மூலம் மாநிலத்திற்குள் புதிய தொழில் முதலீடுகள் எதுவும் வராது. அப்போது முதலீடுகள் எதுவும் தமிழகத்திற்கு வருவதில்லை என்று திமுக பரப்புரை செய்யும். உதாரணத்திற்கு, திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருக்கும்போது யாரும் வரதட்சணை கொடுக்க முன்வராததைப் போல, ஆட்சி நிலைக்குமா? என்ற எதிர்மறைக் கருத்து பரப்பப்படும்போது முதலீட்டாளர்களும் இயல்பாகவே இந்த மாநிலத்தைத் தேர்வு செய்ய மாட்டார்கள்.
விஜய் இப்போதுதான் உணரத் தொடங்கியிருப்பார்
இத்தகைய பரப்புரைகள் அரசு நிர்வாகத்தை முடக்குவதற்கும், விஜய் உருவாக்கியிருந்த பிம்பத்தை உடைப்பதற்கும் பயன்படுகின்றன. முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது விஜய்க்கு இருந்த செல்வாக்கு தற்போது களத்தில் குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் ஆட்சி கவிழும் என்ற பேச்சுகள் எழுவதால் விஜய் தலைமையிலான அரசு துணிச்சலாக முடிவெடுக்க அஞ்சுகிறது.
இதற்குச் சான்றாக, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை சபாநாயகர் ரவிக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டலாம். இறுதியாக, தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அரசியல் என்றால் என்ன என்பதை விஜய் இப்போதுதான் முதன்முறையாக உணரத் தொடங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்” என்றார் விளக்கமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




