‘ஆட்சிக்கு ஆதரவு, அதேசமயம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டி’ என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் த.வெ.க-வினரை கதிகலங்கச் செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அண்மைக்காலமாக த.வெ.க – கம்யூனிஸ்டுகள் இடையே அரசியல் ரீதியான வார்த்தைப் போரும் வெடித்து வருகிறது.
பரபரப்பான இந்தச் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகுதான், மக்கள் சட்டமன்ற நிகழ்வுகளை அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என த.வெ.க-வினரே பெருமைப்படுகிறார்களே?”
“மக்கள் பொறுமையாக இருப்பதை வைத்துக்கொண்டு, அவர்களே விரும்பி ஏற்றுக்கொண்டார்கள்; ரசிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான் பார்த்தவரையில், சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்கிறவர்கள், ‘பொதுமக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், இப்படி ஏதேதோ பேசி திசை திருப்புகிறார்களே…’ என்று வருத்தம்தான் படுகிறார்கள்.
ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்னைகளுக்கு நேரடியான பதில் கொடுக்காமல், எதிர்க்கட்சிகளை கோபமூட்டும் வகையில் பிரச்னையை திசை திருப்பி சத்தமாக பேசுவதால், மக்களுக்கு என்ன பயன்?”
“ஊழலற்ற அரசியல் தருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற த.வெ.க., எதிர்க்கட்சியினரின் ஊழல் குறித்துப் பேசுவதை தவறு என்று எப்படி சொல்லமுடியும்?”
“ஊழலற்ற ஆட்சி தருவோம் என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள் த.வெ.க-வினர். அப்படியென்றால் ஊழலற்ற ஆட்சியைத்தானே அவர்கள் தரவேண்டும். அதை விட்டுவிட்டு இப்போதும்கூட ‘எதிர்க்கட்சியினரின் ஊழலைப் பாருங்கள்’ என்று அரசியல் செய்துகொண்டிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்!”
“சரி… ‘ஜெம் வீரமணி பாலியல் வழக்கு குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன என்று அமைச்சர் ராஜ்மோகன் கேட்கிறாரே… அதற்காவது பதில் சொல்லுங்கள்?”
“இந்தக் கேள்வியை எதற்கு இப்போது எங்களை நோக்கி கேட்கிறார்கள்…. தி.மு.க-வை நோக்கிக் கேளுங்கள்; அவர்கள் விளக்கம் சொல்வார்கள்.
எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும், இதுபோன்ற பாலியல் குற்றங்களை கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்ததாக ஒரு கடுகளவு சான்றை யாராவது காட்ட முடியுமா? தி.மு.க., த.வெ.க என எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், தவறுகளைத் தட்டிக் கேட்பதுதானே கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு. நாங்கள் இதையெல்லாம் ஆதரித்தோமா என்ன?
இப்போது இடைத்தேர்தலில் த.வெ.க-வை எதிர்த்துதான் நாங்கள் போட்டியிடுகிறோம்; அவர்களும் எங்களை எதிர்த்துதான் போட்டியிடுகிறார்கள். ஆனாலும்கூட ‘த.வெ.க ஆட்சிக்கான எங்கள் ஆதரவு தொடரும்’ என்றுதான் சொல்லிவருகிறோம். அப்படியிருக்கும்போது த.வெ.க மட்டும் அவசரப்படுவது ஏன்?
ஆக, மக்கள் பிரச்னை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் விளக்கம் சொல்லுங்கள்; அல்லது நாங்கள் சொல்வது தவறு என்றாவது சொல்லுங்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, கம்யூனிஸ்ட்டுகளைக் கேள்வி கேட்டு பிரச்னையை திசை திருப்பாதீர்கள்!”
“த.வெ.க அரசை நோக்கி கம்யூனிஸ்ட்டுகள் கேள்வி எழுப்புவதால்தானே, அவர்களும் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்?”
“த.வெ.க-வை ஆதரிக்காமல் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம் என்பதற்காகத்தான் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இந்த இடைத்தேர்தல் என்பதே ஒரு ஜனநாயக சீரழிவு. அதை எதிர்த்துதான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். ஆக, இந்த ஜனநாயக சீரழிவு குறித்து த.வெ.க-தான் பதில் சொல்லவேண்டும். அதைவிட்டுவிட்டு வேறொரு பிரச்னையைக் குறிப்பிட்டு நீங்கள் தப்பிக்க நினைக்காதீர்கள் என்பதுதான் எங்களது பணிவான வேண்டுகோள்!”
“தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் ஜனநாயக சீரழிவு என தொடர்ச்சியாக சொல்லிவருகிறீர்களே… எப்படி?”
“ஒரு கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றவர்கள், அடுத்த சில நாட்களிலேயே தங்கள் சுயநலத்துக்காக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறொரு கட்சியில் இணைகிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட அந்தக் கட்சி திரும்பவும் அந்த நபர்களையே தங்கள் கட்சி வேட்பாளராகவும் தேர்தலில் போட்டியிட வைக்கிறது. இது ஜனநாயக சீரழிவு என்று நீதிமன்றமே கண்டிக்கிறது. இதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.”
“இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் சுய விருப்பப்படி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திப்பவர்களை எப்படி குறை சொல்ல முடியும்?”
“இந்த இடைத்தேர்தல் என்பதே தேவையற்ற, திணிக்கப்பட்ட ஒரு தேர்தல். ஏற்கெனவே அ.தி.மு.க கட்சி சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு மக்களும் நம்பிக்கையோடு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், அடுத்த ஒரு வாரத்திலேயே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்ததும், மறுபடியும் இடைத்தேர்தலில் வேட்பாளராக வந்து, ‘எனக்கு வாக்களியுங்கள்’ என மக்களைப் பார்த்துக் கேட்பதிலும் என்ன தார்மீகம் இருக்கிறது?

கட்சி பாகுபாடுகளை விட்டுவிடுங்கள். ஒரு கட்சி எத்தனையோ லட்சம் பேரில் ஒருவரைத்தான் வேட்பாளராக தேர்வு செய்கிறது. ஆனால், அவரோ வெற்றி பெற்ற பிறகு பதவியை ராஜினாமா செய்கிறார் என்றால், முதலில் அது அவர் கட்சிக்கு செய்கிற துரோகம். அடுத்து, அந்தக் கட்சியின் வேட்பாளராக உங்களை நம்பித்தான் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கும் நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்களே…. இது என்ன வகையிலான ஜனநாயகம்?
இதே தவறுதான் மேற்குவங்கத்திலும் மகாராஷ்டிராவிலும் நடக்கிறது. அதைக் கண்டிக்கிற கம்யூனிஸ்ட்டுகள், அதே தவறு தமிழ்நாட்டில் நடக்கிறபோது மட்டும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கிறோம் என்பதற்காக கண்டிக்காமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா? அது அரசியல் பிழை அல்லவா!”
“அண்மைக்காலமாக, ‘கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவில்தான் த.வெ.க அரசே நடைபெறுகிறது’ என்ற தோழர்களின் பேச்சு மிரட்டல் அரசியல் என்கிறார்களே?”
” ‘நாங்கள்தான் உங்களை ஆதரிக்கிறோம். ஆனாலும்கூட நாங்கள் சொல்கிற கருத்துகளை நீங்கள் குறைந்தபட்சம் பரிசீலனைகூட பண்ணமாட்டேன் என்கிறீர்களே… எங்களை ஒரு பொருட்டாகக்கூட கருதவில்லையே’ என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சொல்கிறார்.
உதாரணமாக, தலைமைச்செயலாளர், டி.ஜி.பி என உயர் அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில்தான், ஒரு சுற்றறிக்கையை வெளியிடுகிறார்கள். அதில், ‘இடதுசாரி மாணவர்கள் போராட்டத்தை அனுமதிக்கக்கூடாது. அதற்கு மாணவர்கள் ஆதரவு கிடைத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை கல்வி நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், காவல் துறை கண்காணிக்க வேண்டும்’ என குறிப்பிடப் பட்டிருக்கிறது.
முதல்வரின் கவனத்துக்கு வராமலேயே இப்படியொரு சுற்றறிக்கையை தலைமைச் செயலாளர் மட்டுமே தன்னிச்சையாக அனுப்பியிருக்க முடியுமா? ஒருவேளை அப்படி அனுப்பியிருந்தால், அது சரிதானா? என்ற கேள்விக்கெல்லாம் இதுவரை பதிலே இல்லை. இதையெல்லாம் நாங்கள் கேட்டால், ‘நீங்கள் மிரட்டுகிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள்.”
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் தனிப்பட்ட உங்களது கருத்துகள் த.வெ.க அரசை குறிவைத்து தாக்குவதாக உள்ளனவே ஏன்?”
“த.வெ.க அரசு மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. ‘த.வெ.க ஆட்சியை ஆதரிக்கவேண்டும்’ என்பது எங்கள் கட்சியில் நான் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. அந்த முடிவில் இப்போதும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கருத்துகளைப் பொருத்தவரையில், ஆளுக்கொரு கருத்து சொல்லலாம். ஆனால், கட்சியின் முடிவுகளில் நான் மட்டுமல்ல… எந்தவொரு உறுப்பினருமே மீறமாட்டார்கள்.
ஆனாலும்கூட இப்படியொரு தோற்றம் ஏன் உருவாகிறது என்றால், பத்திரிகையாளர்கள் கேட்கிற கேள்விகள் வெளிவராமல், நாங்கள் கூறுகிற பதில்கள் மட்டுமே வெளியாவதால் ஏற்படுகிற சிக்கல்தான் இது. இந்த தோற்றத்தைக்கூட த.வெ.க-வினரே உருவாக்குகிறார்களோ என்னவோ தெரியவில்லை!
ஏனெனில், அண்மையில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக பாலன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியபோது, ‘நீட் தேர்வு, மாணவர் போராட்டத்தின் மீதான அடக்குமுறை குறித்து தமிழக முதல்வர் கண்டித்திருக்கிறார்’ என்று சொல்லித்தான் பேச்சையே ஆரம்பித்தேன். ‘இப்படி நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒரேயொரு கட்சியைத் தவிர எல்லோருமே கருத்து சொல்கிறார்கள்’ என்று பேசியிருந்தேன். நான் குறிப்பிட்ட அந்த ஒரேயொரு கட்சி பா.ஜ.க என்பது சிறு பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். ஆனால், நான் த.வெ.க-வைக் குறிப்பிடுவதாக கருதிக்கொண்டு, த.வெ.க-வினரே என்னை சோஷியல் மீடியாவில் தாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்கு மேல் நான் என்ன சொல்வது?”
“மகளிர் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படை, இலவச பேருந்து பயணம் என நல்ல திட்டங்களையும் த.வெ.க அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறதுதானே?”
“நல்ல திட்டங்களை நாங்களும் வரவேற்கிறோம். அது பா.ஜ.க அரசாகவே இருந்தாலும்கூட, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினால் இடதுசாரிகள் எல்லோரும் வரவேற்கவே செய்வார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதுவே மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற திட்டங்கள் என்றால், அதை எதிர்க்கவும் தயங்கமாட்டோம்.
உதாரணமாக ஒரு பல்கலைக் கழகம் அமைப்பதற்கு 100 ஏக்கர் நிலம் அவசியம் என்றிருந்த விதிமுறையை மாற்றி, 12 ஏக்கர் இடம் இருந்தாலே போதும் என தனியார் மயத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை த.வெ.க அரசு எடுக்கும்போது அதை எப்படி வரவேற்க முடியும்?”
பட்டினப்பாக்கம் ஏற்கெனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதி. அப்படியொரு இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்போகிறோம் என்று தமிழக அரசு சொல்வது எப்படி சரியான முடிவாகும்? இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இப்படி தன்னிச்சையாக முடிவுகளை அறிவிப்பது எப்படி சரியானதாகும்? இதையெல்லாம் ஒரு தோழமைக் கட்சியாக நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். அவ்வளவுதான்.”
“த.வெ.க கூட்டணிக் கட்சிகளிலேயே கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். ஒரு சினிமா நடிகர் முதல்வரானதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?”
“அப்படியிருந்தால், நாங்கள் ஏன் த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்திருக்கப் போகிறோம்? விஜய் ஒரு திரைப்பட நடிகர்; நல்ல நடிகர் என்பதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.
108 இடங்களில் வென்ற தனிப்பெரும்பான்மை கட்சியான த.வெ.க-வை ஆட்சியமைக்க அனுமதிக்காமல், ‘பெரும்பான்மையை நிரூபியுங்கள்’ என்கிறார் ஆளுநர். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம், நாடாளுமன்றம்தானே தவிர… ஆளுநர் மாளிகை அல்ல. ஆக, ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சூழலைப் பயன்படுத்தி ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பா.ஜ.க அரசை நிறுவ முயற்சி எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டுதான் நாங்கள் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம்.

எனவே, ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் ஆதரவு கொடுத்தோமே தவிர… அவர் நடிகரா, அரசியல்வாதியா என்பதையெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை! அப்போதும்கூட, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீர ஆலோசித்து, ‘அமைச்சரவையில் பங்கேற்க வேண்டாம்; வெளியிலிருந்து ஆதரவு அளிப்போம்’ என்ற ஒருமித்த முடிவை எடுத்து ஆதரித்தோம். இப்போதும் அந்த ஆதரவு தொடர்கிறது. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை!”
“அமைச்சரவையில் பங்கேற்றிருப்பதால்தான் காங்கிரஸ், வி.சி.க., ஐ.யு.எம்.எல் போன்ற கட்சிகள் த.வெ.க-வினரை ஆதரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்கிறீர்களா?”
“இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில், அது அவர்கள் கட்சியின் முடிவு. நான் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை!”




