தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் காவலில் அடைக்கக் கோரும் சி.பி.ஐ-யின் கோரிக்கை மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு காரசார வாதங்கள்:
“வழக்கின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். விசாரணையை முழுமையாக முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எங்களுக்கு மேலும் 3 மாத காலம் தேவைப்படுகிறது. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் வெளியிலிருப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு இடையூறாக அமையும். சாட்சிகளை அச்சுறுத்தவும், சாட்சியங்களைக் கலைக்கவும் வாய்ப்புள்ளதால், அவர்களின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டும்” என சி.பி.ஐ வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.பி.ஐ-யின் கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “சி.பி.ஐ கூறுவது ஒரு பொதுவான குற்றச்சாட்டு மட்டுமே. ஒவ்வொரு வழக்குகளிலும் ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள், சாட்சிகளை மிரட்டுவார்கள்’ என ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளைத் தான் அடுக்குகிறார்கள்.
சாட்சிகளையோ அல்லது சாட்சியங்களையோ கலைக்க முற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் வைக்கும் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டிய அவசியமில்லை” என வாதாடினர்.
தமிழக அரசு தரப்பு கோரிக்கை:
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.கருணாகரன், “இவ்வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிட வேண்டும்” என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தது:
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் தற்போதைய புலன் விசாரணை நிலை குறித்து விரிவான புதிய அறிக்கையை 2 வாரங்களுக்குள் சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ஐ தாக்கல் செய்யும் புதிய நிலை அறிக்கைக்கு அடுத்த 2 வாரங்களுக்குள் அனைத்துத் தரப்பினரும் (மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள்) தங்கள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதித்த இடைக்காலத் தடை தொடர்ந்து நீடிக்கும் (எனவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போதைக்கு வெளியே இருக்க முடியும்). இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படும்” என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
முன்னதாக நேற்று சிபிஐ தாக்கல் செய்த நிலை அறிக்கையில், “பிரபல தலித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பலர் பெரும் செல்வாக்கு படைத்தவர்கள். அவர்கள் வெளியே இருந்தால் சாட்சிகளை அச்சுறுத்தவும், சாட்சியங்களை அழிக்கவும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தலைமறைவாகவும் அதிக வாய்ப்புள்ளது.

மாநில காவல்துறையின் விசாரணையில், இவர்கள் குற்றச் சதியில் ஈடுபட்டது, நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொள்முதல் செய்து கடத்தியது, நிதி உதவி அளித்தது மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நேரடியாகப் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்தவித அழுத்தமும் இன்றி, சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை விரைந்து முடிக்க, முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஜாமீன் உத்தரவை உறுதி செய்து, குற்றவாளிகளை மீண்டும் காவலில் அடைக்க வேண்டும்” என சி.பி.ஐ கோரியுள்ளது.




