போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் ஜேசிபி மூலம் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர். சோதனையின் முடிவில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை.


இந்நிலையில், ஜெம் வீரமணியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் காவல்துறையின் சோதனை குறித்து காட்டமாகப் பேசியிருந்தார். சோதனை முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ”காலை 9 மணிக்கே காவல்துறையினர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஜேசிபியெல்லாம் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனாலும், எங்களின் தரப்பில் காவல்துறையின் சோதனைக்கு எந்தத் தடையும் சொல்லவே இல்லை.
வீட்டில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை என்பதால் வீரமணியின் மனைவி சோதனையை போனில் படம்பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது காவல்துறையினர் வீரமணியின் மனைவியைப் பலவந்தமாக அறையில் அடைத்து வைத்து வீட்டைச் சுற்றி தோண்டி பார்த்திருக்கின்றனர். வீரமணியின் மனைவி கையில் அடிபட்டிருக்கிறது. அவருக்கு வயது 72. அவரின் உயிருக்கு ஆபத்து என்றால் என்ன செய்வது? இவ்வளவு நேரம் ஆய்வு செய்துவிட்டு எதுவும் கிடைக்கவில்லையென போலீஸே கைப்பட எழுதி கொடுத்திருக்கிறது.

நீச்சல் குளத்தின் அருகே தோண்டி சேதப்படுத்தி விட்டனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என்றார்.
காவல்துறை சோதனையின்போது வழக்கறிஞரை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




