முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கடந்த 2015-ஆம் ஆண்டு மேகாலாயா மாநிலத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது இயற்கை எய்தினார். அவர் உடல் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்கரும்பு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் அப்துல் கலாமிற்கு தேசிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள், நினைவு நாளில் சிறப்பு துவா நடத்தப்படுவது வழக்கம். இது தவிர ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் இங்கு வந்து நினைவிடத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர். இதுவரை சுமார் 2 கோடி பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் அப்துல் கலாமின் 11-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர் சிறப்பு துவா நடத்தி மரியாதை செலுத்தினர்.
இதில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பாளர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஜலால் சித்திக், பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், கவுன்சிலர் சங்கர் மற்றும் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், அரசின் சார்பில் கலாம் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர்மன்றத் தலைவர் நாசர் கான் உள்ளிட்ட தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் அதன் பொறுப்பாசிரியர் தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”அய்யா அப்துல் கலாம் அவர்கள் அரசியலில் நெறிமுறை இருக்க வேண்டும் என கனவு கண்டார். அவரது வழியில் வந்த நான் அவர் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் புதிய அமைப்பினை துவங்கியுள்ளேன். அந்த அமைப்பின் மூலம் அய்யாவின் பிறந்த தினத்தில் புதிய பயிற்சி மையம் ஒன்றை துவக்க உள்ளோம். அதில் வருங்கால மாணவர்களுக்கு அரசியல் நெறிமுறைகளை கற்றுத் ததர உள்ளோம். சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்தப் பயிற்சியினை வழங்க இருக்கிறோம். இதற்கான செயல் திட்டங்கள் குறித்து அக்டோபர் 15 அன்று அறிவிப்பேன்” என்றார்.




