இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆவணங்களை வீசி எறிந்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ காவல்துறை அதிகாரிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மனுதாரர், நீதிபதிகளையே மிரட்டும் தொனியில் பேசி இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டார்.
“உங்கள் மீது எங்களுக்குக் கோபம் இல்லை; அனுதாபம் மட்டுமே உள்ளது” என்று கூறி நீதிமன்றத்தின் கண்ணியத்தை நிலைநாட்டிய நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ விகாஸ் நகர் காவல்துறை உதவி ஆணையர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர் பிரபல் பிரதாப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் அரங்கேறிய பரபரப்பு வாதம்:
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பிரபல் பிரதாப் தனது தரப்பு வாதங்களை ஆவேசமாக முன்வைத்தார். ஒருகட்டத்தில் எல்லையைத் தாண்டிய அவர், நீதிபதிகளை நோக்கி, “நீங்கள் நீதிமன்ற ஊழியர்கள்! நீதிமன்ற ஊழியரான நீங்கள், லக்னோ விகாஸ் நகர் காவல்துறை அதிகாரி மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்” என மிரட்டும் தொனியில் கத்தினார்.
மனுதாரரின் இந்த நடவடிக்கையால் திகைத்துப் போன நீதிபதி கே.வி. விஸ்வநாதன், “நீங்கள் எங்களுக்கு உத்தரவிடுகிறீர்களா? காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றத்திற்கே நீங்கள் ஆணையிடுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆவணங்கள் வீச்சு – வசைபாடிய மனுதாரர்:
நீதிமன்றத்தின் கேள்வியால் மேலும் ஆத்திரமடைந்த மனுதாரர், “நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன். இவை அனைத்தும் கேமராவில் பதிவாகியுள்ளது” என்று சவாலிட்டார்.
அத்தோடு நிறுத்தாமல், தன் கையில் வைத்திருந்த வழக்கு ஆவணங்கள் மற்றும் கோப்புகளை நீதிமன்ற அறையிலேயே நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆக்ரோஷமாக வீசியெறிந்தார். மேலும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் அமர்வில் இருந்த நீதிபதிகளைத் தகாத வார்த்தைகளால் வசைபாடத் தொடங்கினார்.
இதையடுத்து, நீதிமன்ற அறையில் பதற்றம் நிலவிய சூழலில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் விரைந்து செயல்பட்டு, நீதிபதிகளை வசைபாடிய பிரபல் பிரதாப்பை வலுக்கட்டாயமாகப் பிடித்து நீதிமன்ற அறையை விட்டு அப்புறப்படுத்தினர். அவரிடம் தற்பொழுது உச்ச நீதிமன்றக் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“கோபம் இல்லை, அனுதாபம் மட்டுமே” – நீதிபதியின் பெருந்தன்மை:
மனுதாரரின் இத்தகைய அநாகரிகமான நடத்தையால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய போதிலும், நீதிபதி கே.வி. விஸ்வநாதன் மிகுந்த நிதானத்துடனும் பெருந்தன்மையுடனும் செயல்பட்டார். மனுதாரரைப் பார்த்து, “உங்கள் மீது எங்களுக்கு எவ்விதக் கோபமும் இல்லை; உங்கள் நிலையை எண்ணி அனுதாபம் மட்டுமே உள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றத்தின் கண்ணியத்தைப் பேண வேண்டியது இங்கு வரும் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, மனுதாரரின் இந்த ஒழுங்கீனமான நடத்தைக்குத் தனது பலத்த அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள் அமர்வு, அவரது மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த காலச் சம்பவத்தின் பின்னணி:
நீதிமன்ற அறைக்குள் இத்தகைய விபரீதச் சம்பவங்கள் நடப்பது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் என்பவர், அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தனது காலணியை வீசியெறிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய பார் கவுன்சில் அந்த வழக்கறிஞரின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ததுடன், வழக்கறிஞர்கள் சங்கமும் அவரை தகுதி நீக்கம் செய்தது. இருப்பினும், பெருந்தன்மையுடன் செயல்பட்ட அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “குற்றம்சாட்டப்பட்ட அந்த வழக்கறிஞரை நான் மன்னிக்கிறேன், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு காலணி வீசப்பட்ட சம்பவத்தைப் போலவே, தற்பொழுது நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரரின் செயல் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!




