உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகள் மற்றும் வெடிமருந்துகளுக்கான செலவை ஐரோப்பிய நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உக்ரைனுக்கு அமெரிகக அளித்து வரும் ஆதரவிற்கான செலவை யார் ஏற்பது என்ற கேள்வி மீண்டும் வலுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய புதிய திட்டத்தின் கீழ், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களுக்கான தொகையை ஐரோப்பிய நாடுகளே செலுத்தி வருகின்றன.
அமெரிக்காவின் சொந்த ஆயுதக் கையிருப்பு குறைந்துள்ளதால், பிற நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். ஈரான் உடனான போரின் காரணமாக அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும். அமெரிக்காவின் வெடிமருந்து உற்பத்தியை அதிகரித்து கையிருப்பை உயர்த்தி வருகிறோம்.
உக்ரைன் மற்றும் நேட்டோ அமைப்பிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஜோ பைடன் ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிடம் கோரியிருந்தால் அவர்களே இந்தச் செலவை ஏற்றிருப்பார்கள். தாமதமாக இருந்தாலும் அந்தத் தொகையை அமெரிக்கா மீண்டும் கேட்டுப் பெறும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். உக்ரைன் மற்றும் ஈரான் போர்கள் காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்கள், அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ட்ரம்பிற்கும் அவரது குடியரசுத் கட்சிக்கும் அரசியல் சவாலாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




