13
August, 2026

A News 365Times Venture

13
Thursday
August, 2026

A News 365Times Venture

`இணைந்தும் செயல்பட மாட்டோம்; விட்டும் செல்ல மாட்டோம்'- எடப்பாடிக்கு எதிராக சி.வி சண்முகம் தரப்பு!

Date:

அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான அதிருப்தி மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் நேற்று நான்கு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்றும், அதே நேரத்தில் அதிமுகவை விட்டு வெளியேறவும் போவதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவதற்காக தாங்கள் பல ஆண்டுகள் வியர்வை சிந்தி கட்சியை வளர்க்கவில்லை என வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் ஆதங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக என்பது ஒரு தனிநபருக்கான அமைப்பு அல்ல என்றும், பல ஆண்டுகளாக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் உழைப்பால் கட்டமைக்கப்பட்ட இயக்கம் என்றும் அவர்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவிக்கு கொண்டு வந்ததில் தங்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சுட்டிக்காட்டும் இந்த இரு தலைவர்களின் தரப்பு, தற்போது தங்களையே கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, தலைமைக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களைக் காட்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கே கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி

மேலும், கட்சியின் பெயரையும் அமைப்பையும் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வருவதாகவும் வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதனை வெளிப்படையான தலைமைப் போட்டியாக உடனடியாக மாற்றாமல், அதிமுகவுக்குள்ளேயே இருந்து தங்களது அரசியல் நிலைப்பாட்டைத் தொடர வேண்டும் என்பதே அவர்களின் தற்போதைய முடிவாக இருப்பதாக தெரிகிறது.

இந்த மோதலின் பின்னணி சில மாதங்களுக்கு முன்பே உருவானது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மே மாதத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து வெளிப்படையான மோதலாக மாறியது.

தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணியினர் அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியது.

இதன் தொடர்ச்சியாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதேநேரத்தில், வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிராகவும், எடப்பாடி தரப்பினர் வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு எதிராகவும் தகுதி நீக்க நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனுக்கள் அளித்தனர்.

இந்த மோதல் நீடித்த நிலையில், மே 27-ஆம் தேதி வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக அளித்திருந்த தகுதி நீக்க மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி

இதையடுத்து அதிமுகவில் ஏற்பட்டிருந்த மோதல் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. அப்போது, அதிமுகவில் பிளவு இல்லை என்றும், கருத்து வேறுபாடு மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த சமரசத்துக்குப் பின்னரும் அடிப்படை கருத்து வேறுபாடுகள் நீடித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் தேர்தல் செயல்பாடு, கூட்டணி முடிவுகள், தேர்தல் தோல்விக்கான பொறுப்பு, கட்சியை நடத்தும் விதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் சி.வி.சண்முகத்தின் சமீபத்திய விமர்சனங்கள் முக்கியத்துவம் பெற்றன. அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகள், வாக்கு வங்கி சரிவு மற்றும் கூட்டணி சார்ந்த முடிவுகள் குறித்து அவர் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சித்து வருகிறார். குறிப்பாக அதிமுக வென்ற தொகுதிகளில் பல, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் கிடைத்தவை என அவர் விமர்சித்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் இருவரும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தில் முக்கியமானவர்கள். 2022-ஆம் ஆண்டு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்தபோது, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் வேலுமணிக்கு முக்கிய கட்சிப் பொறுப்பும், சி.வி.சண்முகத்திற்கு அமைப்புரீதியான முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோதும் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அவருடன் சென்றிருந்தனர். அப்போது இருவரும் எடப்பாடி தலைமையின் முக்கியமான தூண்களாகவே பார்க்கப்பட்டனர்.

அப்படிப்பட்ட சூழலில், தற்போது இருவரும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தாங்கள் எம்.எல்.ஏக்களாக இருப்பதால்தான் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து முழுமையாக நீக்காமல் இருப்பதாகவும் வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினர் கருதுவதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ பதவி இல்லாமல் இருந்திருந்தால் தங்களை எப்போதோ கட்சியில் இருந்து நீக்கியிருப்பார் என்றும் அவர்கள் காட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

மறுபுறம், வேலுமணி தரப்பைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி அணிக்கு திரும்பிய சம்பவமும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. இதனால், சட்டப்பேரவையில் வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பின் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அரசியல் அணியை உருவாக்குவதைவிட, கட்சிக்குள்ளேயே இருந்து அரசியல் அழுத்தத்தை உருவாக்குவதே தற்போதைய அணுகுமுறையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியை விட்டு வெளியேறாமல், தனிக்கட்சி தொடங்காமல், அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படாமல் இருப்பது என்பது அதிமுகவுக்குள் ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுமா, அங்கு தேர்தல் தோல்வி மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படுமா, வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பினர் தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் மூத்த நிர்வாகிகளையும் ஒருங்கிணைக்கப் போகிறார்களா என்பது அதிமுக அரசியலில் முக்கிய கேள்விகளாக உருவெடுத்துள்ளன.

ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நிலையில், மறுபுறம் அவருடன் இணைந்து செயல்படாமல் கட்சிக்குள்ளேயே இருந்து செயல்படுவோம் என வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு, அதிமுகவில் மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது.

மே மாதத்தில் வெளிப்படையாக வெடித்த மோதல் பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக தணிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது வேறு வடிவத்தில் மீண்டும் உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில், வேலுமணி – சி.வி.சண்முகம் அத்தியாயம் முடிவுக்கு வரவில்லை; மாறாக, கட்சிக்குள்ளேயே இருந்து புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கும் கட்டத்தை எட்டியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சொத்து வரி மறு மதிப்பீடு தற்காலிகமாக நிறுத்தம் – சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான சொத்து உரிமையாளர்களுக்கு அண்மையில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட...

"முக்கிய பங்குள்ள பத்திரிகையாளர்களை ஏன் அனுமதிக்கவில்லை?" – முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து TRB ராஜா

இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு...

காவிரி விவகாரம்: பிசுபிசுத்த கன்னட அமைப்பினரின் போராட்டம் – ஆதரவு கொடுக்காத கர்நாடக மக்கள்!

மேகதாது அணை கட்டவும், காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்கக் கூடாது என்பதை...

“எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள்...