அமெரிக்க நாடாளுமன்றத்தால் கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது ‘அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம்’ (USCC). இந்த ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனது வருடாந்திர அறிக்கையை சமர்பிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, சீனா இந்தியாவின் ராணுவத் திட்டமிடலில் சிக்கல்களை ஏற்படுத்தியதோடு, இந்தியப் படைகளின் வளங்களை முடக்கி வைத்ததாக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த அறிக்கையில், “அமெரிக்கக் கூட்டணி அமைப்புக்கு வெளியே, சீனாவுடனான நீண்டகாலப் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில சக்திகளில் இந்தியாவும் ஒன்று. இதை சீனா நன்கு உணர்ந்துள்ளது. எனவே, பல்வேறு துறைகளில் இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க சீனா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் சீனா வளர்த்து வரும் ராணுவக் கூட்டாண்மை, இந்தியாவுக்கு ‘இருமுனைப் போர்’ குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
கடந்த 2025 மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது, சீனா நேரடியாகப் போரில் இறங்காமலேயே பாகிஸ்தானை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. இது பாகிஸ்தானுடனான எதிர்கால மோதல்கள் எவ்வாறு உருவெடுக்கும் என்பது குறித்த இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. சீன உற்பத்தியை இந்தியா சார்ந்திருப்பது பெய்ஜிங்கிற்கு ஒரு முக்கிய ஆயுதமாகவும், அமெரிக்காவிற்கு வளர்ந்து வரும் பலவீனமாகவும் மாறியுள்ளது. தொழில்துறை உள்ளீடுகள், உபகரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை இந்தியாவுக்கு வழங்குவதை சீனா கட்டுப்படுத்தியுள்ளது.

மேலும், சீனாவிலிருந்து வழங்கப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்கு மறுஏற்றுமதி செய்யப்படாது என்று சில இந்திய நிறுவனங்களிடம் சான்றிதழ் கோரியுள்ளது. அத்துடன், சீனாவின் விலை நிர்ணயக் கொள்கை இந்தியாவின் புதிய மருந்து உற்பத்தியைப் பாதித்துள்ளது. சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலிகளை இந்தியாவுக்கு மாற்றும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கும் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடைந்து வரும் கடற்படை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், அப்பகுதியில் இந்தியா நீண்டகாலமாகக் கொண்டிருந்த ஆதிக்கத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
இது இந்தியப் படைகளுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தென் சீனக் கடலில் கையாண்ட அதே தந்திரத்தை இந்தியப் பெருங்கடலிலும் சீனா தொடங்கியுள்ளது. வருங்காலத்தில் உரிமை கோருவதற்கு அடித்தளமிடும் வகையில், கடலுக்கடியில் உள்ள பகுதிகளுக்கு சீனா மறுபெயரிட்டு வருகிறது.” என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




