பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை. ஏராளமானோர் காணாமல் போகிறார்கள், குறிப்பாக குழந்தைகள் பலர் காணாமல் போகும் சூழல் நிலவுகிறது. அமைச்சர்கள் ஆளுக்கொரு கதையாக முரண்பாடாகப் பேசுகிறார்கள். இந்த ஆட்சி எவ்வாறு இருக்கிறது? என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள்…” எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிரித்துக்கொண்டே, “மின்வெட்டு குறித்துப் பேசவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன்.
இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்ற Current situation-ஐ, நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே, கரண்டே சொல்லிவிட்டது. அதேநேரம் கடந்த திமுக ஆட்சியுடன் இதை ஒப்பிடவும் முடியாது.
ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கும் ஆறு மாத கால ஆட்சிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, இந்தக் குறுகிய கால ஆட்சியை வைத்து உடனடியாக எந்த முடிவிற்கும் வந்துவிட முடியாது. இருப்பினும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இல்லை என்பது உண்மை.
அதே நேரத்தில், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். ஆனால், சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அனுபவம் குறைவாக உள்ள இளம் உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காத்து, தங்களின் செயல்பாடுகளைத் திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். முதலமைச்சரின் வழிகாட்டுதல் கூட்டம் அவர்களுக்கு உரிய பாதையைக் காட்டும் என்று நான் நம்புகிறேன்.

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது தொடர்பாக அவரே நேரடியாகப் புகார் அளித்தால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இந்த அணுகுமுறையில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்கள் அனைவரும் உடனடியாக நேரடியாக வந்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தவறுதலாக யாரையும் குற்றம் சாட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், அதற்காக பெண்கள் தாமாக வந்து புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது சரியான நிலைப்பாடு அல்ல.
மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் கூட, சில சமயங்களில் சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் இருக்கவே செய்யும். அனைவரும் தயக்கமின்றி முன்வந்து பேசுவார்கள் என்று சொல்ல முடியாது. ஜெம் வீரமணி வழக்கில்கூட போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தைக் கூறித்தான் முந்தைய ஆட்சியில் தப்பிக்க விட்டார்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களின் புகாருக்குரிய ஆதாரங்களைத் தாங்களே திரட்டிக்கொண்டு வர முடியுமா? எனவே, ஆதாரங்கள் இல்லை என்றோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்களே நேரடியாக வந்து புகார் அளிக்கவில்லை என்றோ காரணங்களைக் கூறாமல், பெண்களுக்கு எவ்வித பாலியல் தொல்லைகள் நேர்ந்தாலும் அதில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மிகத் தீவிரமான அணுகுமுறை அவசியம் என்று நான் கருதுகிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




