தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து, புதிய அரசியல் இயக்கத்தைத் துவக்குவதாக அறிவித்திருந்தார்.
இதற்காக ‘நாம் தலைவர்கள்’ என்ற பெயரில் ஏற்கெனவே அவர் நடத்தி வந்த அமைப்பில் இணையம் வழியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தலில் தனது இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்று கூறியுள்ள அண்ணாமலை, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது எப்போது?, அதற்குப் பெயர் என்னவாக இருக்கும்? என்பன பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், தன் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை.
தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது.
இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும். இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது.
மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும். ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் எனச் சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம்.
ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது. எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




