தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜோசப் விஜய் ஓர் அற்புதத்தை நடத்திக் காட்டியுள்ளார்.
108 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய்தான் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர். ஆட்சி அமைத்து நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை முதல்வர் ஜோசப் விஜய் பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் இனி ஒரே கழகம்தான் அது தமிழக வெற்றிக் கழகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழாகப் பார்க்க வேண்டும்.
தி.மு.க அ.தி.மு.க அரசியல் பேசாமல் முதல்வர் விஜய்யைப் பற்றி மட்டும் விமர்சனம் செய்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள் அ.தி.மு.க நிலைமையைப் பற்றி யோசித்தால் வேதனைக்குரிய விஷயம்தான். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க இருந்தபோது தோல்வியைக் காணாத இயக்கமாக இருந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவை இந்திய துணைக்கண்டத்தில் மூன்றாவது கட்சியாக உயர்த்தினார். கடந்த 2021-ல் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தது. 2026-ல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. தற்போது அந்தக் கட்சி இன்று மழுங்கி, மங்கி விட்டது. ’திருமங்கலம் ஃபார்முலா’ என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது தி.மு.க. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் நடைபெற்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினர் மக்களை எப்படிச் சந்தித்தனர் என்பது தெரியும். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் பணம் கொடுத்து வாக்குகளைத் திருடாமல், வாங்காமல் நேர்மையாக தேர்தலைச் சந்தித்தனர்.

இது ஒன்றே தூய சக்தி என்பதற்கு ஒரு அடையாளம். இடைத்தேர்தல் என்றால் மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இடைத்தேர்தல் வந்துவிட்டால் தீபாவளி, பொங்கல் என்று மக்கள் எதிர்கொள்வார்கள். ஆனால் இந்த இடைத்தேர்தலில் ஒருபைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலைச் சந்தித்தது.
பொருளாதார வீக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் விலைவாசி உயரும். பொருளாதார நிலை சரியாகும் போது விலைவாசி குறையும். விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். நிச்சயமாக விலைவாசி உயர்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.




