கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(32). பூக்கடை நடத்தி வந்த இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராகப் பொறுப்பில் இருந்தார்.
இவருக்கு முனீஸ்வரி(32) என்ற மனைவியும் இரண்டு வயதுடைய நித்யஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதிமுக-வில் நிலவும் உட்கட்சி பிரச்னை, பிளவு தொடர்பாக மனஉளைச்சலில் இருந்து வந்த மகேந்திரன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கருத்தை முன் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தானே தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
முன்னதாக மகேந்திரன், தான் பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ”கட்சியில் நடக்குற பிரச்னைகளைப் பார்க்கும்போது என்னை மாதிரி எளிய தொண்டர்கள் ரொம்ப மனவேதனையுடன் இருக்கிறோம். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும்.
என்னுடைய இறப்பிற்குப் பிறகாவது கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்று சேர வேண்டும். என்னுடன் அரசியலில் பயணித்த நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
என் இறப்பிற்குப் பிறகாவது அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். என் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆத்மா சாந்தியடையும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் அதிமுகவின் எளிய தொண்டனாக ஆசைப்படுகிறேன்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். மகேந்திரன் தற்கொலை அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையான தொண்டனை இழந்து விட்டோம், இனியாவது இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என அதிமுக-வின் ராஜ் சத்யன் குறிப்பிட்டிருப்பதும் கட்சிக்குள் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ”மகேந்திரன் அதிமுகவின் தீவிரமான தொண்டர். எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான விசுவாசி. கட்சி செயல்பாடுகளில் தீவிரமாகச் செயல்படக் கூடியவர். கட்சி நலன் குறித்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டே இருப்பார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக-வில் நடக்கும் நிகழ்வுகளால் மன உளைச்சலில் இருந்தார். கட்சியினரிடத்திலும், தனக்கு நெருக்கமானவர்களிடத்திலும் இதனைப் பேசி புலம்பிக் கொண்டே இருந்து வந்தவர் உயிரை மாய்த்து கொள்ளும் முடிவெடுப்பார் என்று நினைக்கவில்லை. இப்போது உண்மையான அதிமுக தொண்டனை இழந்து விட்டோம்.
இது எங்களுக்குள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியிருக்கிறார். மகேந்திரனின் குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ.30 லட்சம், கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 25 லட்சம் மற்றும் பிள்ளையின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளனர்.
மகேந்திரன் சொன்னது போல் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே அவரது ஆத்மா சாத்தியடையும்” என்றனர்.




