“உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வருவதில்லை என ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறினர். இதனையடுத்து புதுக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 5 அரசுப் பேருந்துகள் ஒரு தனியார் பேருந்து என, 6 பேருந்துகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் ஆட்சியர்.
அத்துடன் ஊருக்குள் வந்து பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் தொலைதூரப் பேருந்துகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து சென்றுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால், ஒரே நாளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிடும் விதமாக இன்று மீண்டும் அதிகாலை முதல் மூன்று அரசுப் பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் புதுக்குடி வழியாக நேரடியாக சென்றது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பேருந்துகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். போக்குவரத்துக் கழக நிர்வாகம் சொல்வதைத்தான் நாங்கள் கேட்க முடியும் என பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மக்களிடம் கூறினர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆட்சியரின் உத்தரவையே மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் ஊர் மக்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் போக்குவரத்து கழகத்தினரின் தொடர் அலட்சியத்திற்கு எதிராக கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதுடன் நீதிமன்றத்தினை நாடவும் அப்பகுதி மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.