கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. ஆட்சி அமைத்து சில மாதங்களே ஆன நிலையில் கட்சிக்குள் அதிருப்தி வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் தனது அதிருப்தியை முதன்முதலாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
யு.டி.எஃப் அரசு அமைந்த சில நாட்களிலேயே, அரசு நிர்வாக முடிவுகளில் கூட்டணித் தலைவர்களை முதலமைச்சர் கலந்து ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை அவர் கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து யு.டி.எஃப் ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தாலும் சரி, டெல்லியில் அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தாலும் சரி, இந்த நியமனங்கள் குறித்து கூட்டணி ஒருங்கிணைப்பாளரான எனக்கு எதுவுமே தெரியாது.
எல்லாவற்றையும் மற்றவர்களைப் போல நானும் ஊடகச் செய்திகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது. கேபினட் அந்தஸ்து பெற்ற அந்த இருவரும் தகுதியானவர்கள்தான், அவர்களை நான் குறை கூறவில்லை. ஆனால், யு.டி.எஃப் கூட்டணிக்குத் தெரியாமல் எப்படி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
வாரியங்கள், கழகப் பதவிகள் குறித்து கூட்டணியில் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பே முடிவானது. ஆனால் ஒரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. முதலமைச்சர் கூட்டணியை ‘ஹைஜாக்’ செய்கிறார் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஜனநாயகத்தில் கூட்டு ஆலோசனை என்பது மிக மிக அவசியம்.
என்னை இந்த ஒருங்கிணைப்பாளர் பதவியில் அமர்த்தியது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. எனவே, நடக்கும் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக டெல்லி மேலிடத்திற்குத் தெரிவிக்கப் போகிறேன். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஹெலிகாப்டர் மற்றும் விமானப் பயணங்கள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் முதல்வர் வி.டி.சதீசன் மீதான யு.டி.எஃப் ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷின் இந்தக் குற்றச்சாட்டு அக்கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேவஸ்வம் துறை அமைச்சர் கே.முரளீதரன் கூறுகையில், “அடூர் பிரகாஷ் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். ஆனால், இதுபோன்ற உள்விவகாரங்களை அவர் பொதுவெளியில் பேசி ஊடகங்களுக்குத் தீனி போட்டிருக்கக் கூடாது.
அரசு நிர்வாகம் என்பது ஒரு அவசர நடைமுறை. மக்கள் நலன் கருதியும், நிர்வாக வேகம் கருதியும் முதலமைச்சர் சில முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். அதற்காக அவர் கூட்டணியை மதிக்கவில்லை என்றோ, சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார் என்றோ அர்த்தமல்ல.

அரசுக்கு என்று சில அதிகார வரம்புகள் உள்ளன. நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் திறமையானவர்கள் என்பதை அடூர் பிரகாஷே ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது, சின்னச் சின்ன நடைமுறை இடைவெளிகளைப் பெரிதுபடுத்தி, அரசு பதவியேற்ற தொடக்கத்திலேயே சர்ச்சைகளை உருவாக்குவது கட்சிக்கும் கூட்டணிக்கும் நல்லதல்ல.
அவருக்கு ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதைத் தலைமைக்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் பேசித் தீர்த்திருக்க வேண்டும். மாறாக, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி எதிர்த்தரப்பினருக்கு ஆயுதம் கொடுப்பது ஏற்புடையதல்ல. முதலமைச்சர் வி.டி.சதீசன் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துத்தான் செல்கிறார். இதில் எந்தவொரு ஒளிவுமறைவும் இல்லை” என்றார்.




