விருதுநகர் நகராட்சி ஆணையர் சுகந்தி. இவர், வருவாய் ஆய்வாளரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் மனவேதனை அடைந்த அந்த ஊழியர் பதற்றத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகப் பரபரப்பு செய்தி பரவியது. எனவே நடந்தது என்ன என அறிய நகராட்சி அலுவலர்களிடம் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்திற்கு முன்பாக வரவேண்டும், நகராட்சிக்கு வரவேண்டிய வரி பாக்கிகளை விடுபடுதல் இல்லாமல் வசூலித்து நகராட்சி நிதிநிலையை உயர்த்தவேண்டும் எனக் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று காலை வெகு சீக்கிரமே நகராட்சி அலுவலகப் பணியாளர்கள் வந்திருந்தனர். அப்போது வரி வசூல் குறித்து வருவாய் ஆய்வாளர்களுக்கு ஆணையாளர் அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, வருவாய் ஆய்வாளர் சரவணன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து ஆய்வாளர் சரவணன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் இந்த சம்பவம், வருவாய் ஆய்வாளர் சரவணனை, ஆணையாளர் சுகந்தி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால்தான் பதற்றத்தில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகப் பரவியது” என்றனர்.
சம்பவம் தொடர்பாக ஆணையாளர் சுகந்தியிடம் கேட்டதற்கு, “வருவாய் ஆய்வாளர் சரவணன் சிவகாசியைச் சேர்ந்தவர். அவர் சிவகாசி மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக இதற்கு முன்பு பணியிலிருந்தபோது இதேபோல, இரண்டு முறை மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகச் சரவணன் விருதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சரவணனுக்குச் சர்க்கரை நோய் போன்ற உடல்நல பாதிப்புகள் உள்ளன. அதற்காக அவர் மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் உடல் நலனில் அவர் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதால் காலை மயக்கம் அடைந்துள்ளார். இதுதான் நடந்தது” என்றார்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சரவணனிடம் போலீஸார் விசாரிக்கையில், காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாததாலும், உணவு சாப்பிடாததாலும் தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY