அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேசவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது த.வெ.க தலைவர் விஜய்யும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
த.வெ.க தலைவர் விஜய், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்…— TVK Vijay (@TVKVijayHQ) February 16, 2025
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.