தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகியவை சட்டமன்ற தேர்தல் முடிந்து, ரிசல்டுக்காக காத்திருக்கின்றன.
கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) தான், மேற்கு வங்கம் இரண்டாம் கட்ட தேர்தலை சந்தித்து முடித்திருந்தது.
இந்த நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடந்து வருகிறது.
மக்ரஹத் பச்சிம் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் துறைமுகம் தொகுதியில் 4 வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
எதற்காக இந்தத் தேர்தல்?
இந்த இரண்டு தொகுதிகளிலும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று 29 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கொடுத்த அறிக்கையின் படி, மீண்டும் இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படுகின்றன.
புகார் கொடுத்தது யார்?
இந்த இரு தொகுதிகளிலுமே திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் ஆதிக்கம் கொண்டது ஆகும்.
இந்த இரு தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக அளித்த புகாரில் இன்று மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தரப்போ, ‘இந்த இரு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையாக வெற்றி பெறும் என்பது தெரிந்து, பாஜக மறுதேர்தலை கேட்டுள்ளது.
இருந்தாலும், மக்களின் பதில் பாஜகவிற்கு எதிராகத்தான் வரும்” என்று கூறுகிறது.




