23
April, 2026

A News 365Times Venture

23
Thursday
April, 2026

A News 365Times Venture

போதுமான ரயில், பேருந்து இல்லாமல் அவதிப்பட்ட மக்கள்; ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்; பயணியின் அனுபவம்

Date:

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியிருக்கிறது. அதே நேரம், வாக்குரிமையை நிறைவேற்ற தயாரான பெரும் திரளான மக்கள் கூட்டம் நேற்று இரவிலிருந்து அல்லோலப்பட்டு இருக்கிறது.

போதுமான பேருந்து வசதி, ரயில் வசதி இல்லாமல், வாகன நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி பயணத்தைத் தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நேற்று இரவு 8:20 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மதுரவாயல், போரூர் டோல்கேட் வழியாக கிளாம்பக்கம் செல்லும் 101CT பேருந்தில் ஏறினேன். ஏறும்போது பேருந்து நிரம்பி வழிந்தது.

தொடர்ந்து 3 பேருந்துகள் தானியங்கி கதவைத் திறக்காமல் சென்றதால், கிடைத்த பேருந்தில் சென்றுவிடலாம் என்றே பலரும் பேருந்தில் ஏறினார்கள்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

ஆனால், மதுரவாயலை பேருந்து கடக்கும்போது மணி இரவு 10. ஏற்கெனவே பேருந்து கொள்ளளவை மீறி சுமந்திருக்கும் நிலையில், தொடர்ந்து நிறுத்தங்களில் மக்களை ஏற்றுவதில் தீவிரமாக இருந்தார் நடந்துனர்.

ஒருகட்டத்தில் பயணிகள், ‘ஏற்கெனவே மூச்சுவிட முடியல… வயசானவங்க மயக்கம் வருதுன்னு சொல்றாங்க… குழந்தைங்க வாந்தி எடுத்துட்டு இருக்கு… இதுல நீ இன்னும் ஆட்களை ஏத்தி எங்களைக் கொல்லபோறியா?’ எனக் கடுமையான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார்கள்.

போரூர் டோல்கெட்டில் சுமார் 2 கி.மீ., தூரம் ஆட்கள் பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். இந்தப் பேருந்து வந்ததும் அந்தக் கூட்டம் பேருந்தை மொய்த்துக்கொண்டது. உள்ளிருந்து கதவைத் திறக்க எதிர்ப்பும் வெளியிலிருந்து ‘கதவைத் திற’ என்ற கோபத்துக்கு மத்தியில் நடந்துனர் விழிபிதுங்கி நின்றார். ஒருவழியாக சிலரை மட்டும் பேருந்தில் ஏற்றிக்கொண்டு பேருந்து நகர்ந்தது.

பேருந்து பெருங்களத்தூர் வரும்போது மணி 12 தொட்டிருந்து. பேருந்தில் இருந்த குழந்தைகள் காற்றுக்காக அழத் தொடங்கின. என் அருகிலேயே 4 குழந்தைகள் இருந்தனர். ஒரு வயதான பாட்டி நிற்க முடியாமல் அப்படியே அமர்ந்தார்.

அவருடைய கால் வீங்கியிருந்தது. ஒருவர் மயக்கமாக இருக்கிறது தண்ணீர் இருக்கிறதா எனக் கேட்கத் தொடங்கினார். அப்படியே பேருந்தில் இருந்தவர்கள் தங்களிடம் இருந்த தண்ணீரை பேருந்தில் தேவைப்படுவோருக்கு வழங்கினார்கள்.

குறைந்தது 100 பேர் இருந்திருப்போம். எங்களுக்கு தண்ணீர் போதவில்லை. ஜன்னல் ஓரம் இருந்த ஒரு பயணி, தனியார் பேருந்து ஓட்டுநரிடம் தண்ணீர் கேட்டார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

அவர் கொடுத்த 2 லிட்டர் தண்ணீர் பட்டில் மீண்டும் ஒரு சுற்று வந்தது. அதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பெண்கள் தண்ணீருக்காக தனியார் பேருந்து ஓட்டுநர்களிடம் சாவகாசமாக பேசி வாங்கி தேவைப்படுவோருக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

இப்படியாக சுமார் 6 லிட்டர் தண்ணீர் வாங்கப்பட்டது. ஆனால் அப்போதுவரை பேருந்து பெருங்களத்தூரைத் தாண்டவில்லை. பேருந்து ஒவ்வோர் அடியாக நகர்ந்து கொண்டிருந்தது.

பொறுமை இழந்த சில பயணிகள், நடு ரோட்டில் கட்டமாகப் பேசி பேருந்திலிருந்து இறங்கிவிட்டார்கள். ஆனால் குழந்தைகளின் அழுகையும், பெற்றோரின் தவிப்பும் அடங்கவே இல்லை. மணி நல்லிரவு 2:33… வண்டலூர் பூங்காவுக்கு அருகில் என்னுடன் சேர்த்து சில பயணிகள் இறங்கினார்கள்.

சாலையில் இறங்கி நடக்கும்போதுதான் மக்கள் வெள்ளத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

வண்டலூர் சிக்னல் தாண்டியதும் வெளியூர் பேருந்துகளில் நடத்துநர்கள் ஆட்களைத் திணித்துக்கொண்டிருந்தார்கள்.

சாலையோரம் முழுவதும் வயதானவர்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள், இளைஞர்கள் என நீண்ட வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

ஒருவழியாக கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை அடைந்தோம். காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

பேருந்து நிலையத்துக்கு வெளியே இருக்கும் கூட்டத்தில் இரண்டில் ஒரு பகுதி அளவு உள்ளே இருந்தது. பல இடங்களில் பேருந்து இல்லாமல் வெற்று அறிவிப்பு மட்டுமே இருந்தது.

பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் நிரம்பியே வந்தது. கையறு நிலையில் 3:30 வரை நானும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். ஒருவழியாக நிரம்பிய பேருந்தில் நானும் ஒருவனாக ஐக்கியம் ஆக, சில இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணித்தார்கள்.

ஆனால் இந்த வாகன நெரிசல் கிளம்பாக்கத்துடன் நிற்கவில்லை. விக்கிரவாண்டி வரை தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது….

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related