மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிட்ட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா படுதோல்வியை சந்தித்தது. கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே மகன் கூட தேர்தலில் தோற்றுப்போனார். இத்தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ராஜ் தாக்கரே தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதற்கு சம்மதிக்க மறுத்த பா.ஜ.க மாநகராட்சி தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டது. இதனால் பா.ஜ.க மீதும் ராஜ்தாக்கரே அதிருப்தியில் இருக்கிறார்.
இந்நிலையில் உறவினர்களின் திருமணத்தில் ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் ஒன்றாக கலந்து கொண்டனர். ராஜ் தாக்கரே சிவசேனாவில் இருந்து 2005-ம் ஆண்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு உத்தவ் தாக்கரேயை சந்திப்பதை தவிர்த்து வந்தார். முதல் முறையாக இருவரும் திருமண நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு முறை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை தொடர்ந்து நேற்று நடந்த திருமணத்திலும் இருவரும் ஒருவரை ஒருவர் மூன்றாவது முறையாக சந்தித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரேயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். சித்தப்பா மற்றும் பெரியப்பா மகன்களாக இருவரும் தற்போது சந்தித்த போது மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சமீப காலமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர்கள் அடுத்தடுத்து துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு தாவி வருகின்றனர். இதனால் தற்போது இருவரும் சந்தித்து பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு இரண்டு மாதத்திற்கு முன்பு இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கின்றனர். இப்போது மீண்டும் சந்தித்து பேசி இருப்பதால் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு களையப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஓரிரு மாதத்தில் நடைபெற இருக்கும் மாநகராட்சி தேர்தலில் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அரசியலில் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் ராஜ்தாக்கரேயை எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளும் கூட்டணியில் சேர்க்காமல் இருக்கின்றன. இதனால் எதாவது ஒரு கூட்டணியில் சேர வேண்டிய நெருக்கடியில் ராஜ்தாக்கரே இருக்கிறார். தொடர்ந்து தேர்தல்களில் ராஜ்தாக்கரே கட்சி தோல்வி அடைந்து வருவதால் தொண்டர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே வரும் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
