புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் 1997 முதல் 2006-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஆனந்தன். முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். இவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் வருவாய்க்கு அதிகமாக ரூ.3.75 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.
அத்துடன் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் அசோக் ஆனந்த் பெயரிலும் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டிருந்ததால், அவர்களையும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கில் இணைத்தது.
வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, 2011 சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பாக தட்டாஞ்சாவடி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வானார் அசோக் ஆனந்த்.
அந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, முதல்வர் பதவியில் அமர்ந்தார். `ஆட்சி அதிகாரத்தை வைத்து, ஊழல் வழக்கை நீர்த்துப்போக வைக்க முயற்சிக்கிறார் முதல்வர் ரங்கசாமி’ என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியது காங்கிரஸ் கட்சி. அதற்கு ஏற்றாற்போல 2016-ல் ஆட்சி முடியும் வரை நீதிமன்றத்தில் அசைவற்றுக் கிடந்தது அந்த வழக்கு.
தொடர்ந்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில், மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ-வானார் அசோக் ஆனந்த். ஆனால், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து நாராயணசாமி முதல்வராக அமர்ந்தார். அதையடுத்து தூசி தட்டி எடுக்கப்பட்ட வழக்கு, மீண்டும் வேகமெடுத்தது.
அதன் விளைவாக, ‘ஆனந்தன், அசோக் ஆனந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால், இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

வருவாய்க்கு அதிகமாக இவர்கள் சேர்த்த சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று 2018 அக்டோபர் 30-ம் தேதி உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம்.
அதனால், தன்னுடைய எம்.எல்.ஏ பதவியைப் பறிகொடுத்தார் அசோக் ஆனந்த். ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அசோக் ஆனந்த் தரப்பு.
2025 ஜனவரி 16-ம் தேதி அங்கு நடைபெற்ற விசாரணையில், புதுச்சேரி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், “மத்திய சிவில் சர்வீசஸ் ஒழுங்கு விதிகளின்படி அரசு ஊழியரான ஆனந்தன், தன் பெயரிலும், தன்னுடைய குடும்பத்தினர் பெயரிலும் இருக்கும் சொத்துகளின் விபரங்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான அவர்களது ஆடிட்டர், `ஆனந்தின் தந்தை பணக்காரர், அவரது சகோதரர் எம்.எல்.ஏ என்றும், மாமனார் பெரிய பணக்காரர் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

ஆடிட்டர் என்பவர் வருமான வரியைத் தாக்கல் செய்பவர்தானே தவிர, ஒருவரது குடும்ப வருவாயையும், சொத்துகளையும் கூறுபவர் இல்லை. அரசு ஊழியர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், தங்கள் சொத்துகளுக்கு கணக்கு கூற வேண்டும்.
மாறாக, தங்களுக்குச் சாதகமாக இருக்கும் ஒருசில சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதால், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறேன்” என்று தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆனந்தனும், அசோக் ஆனந்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார், “மனுதாரர்கள் இருவரும் திருத்தியமைக்கப்பட்ட மறுமதிப்பீட்டுக் கணக்கின்படி குறுப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டனர் என்பதை, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டது.

எனவே இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்கிறேன். மேலும் வருமானத்துக்கு அதிகமான அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்கிறேன்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.




