புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று துவங்கிய சுகாதாரத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த துவக்க விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என 9 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனாலும் சிகிச்சைகளுக்காக நாம் சென்னை செல்லும் நிலையில்தான் இருக்கிறோம். அதனால் அதிக பணம் செலவாகிறது. தற்போதைய சூழலில் உடல் பருமன் பிரச்னை பெரிய அளவில் இருக்கிறது.
அதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் யோகா சிகிச்சையை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
நிர்வாகத்தில் பெரிய குறை இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறும் நிலையில் இருக்கிறேன். ரூ.11 கோடிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்மிடம் இல்லை. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. ரூ.3 கோடி செலவு செய்து படித்துவிட்டு பணிக்கு வரும் சிறப்பு மருத்துவர்களுக்கு நாம் ரூ.1 லட்சம்தான் சம்பளம் கொடுக்கிறோம். அதனால் அவர்கள் சில நாட்களிலேயே தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.
அதனால் மருத்துவர்களின் சம்பள உயர்வு, பணியாளர் நியமனத்திற்கு கோப்புகள் தயாரித்து அனுப்பினால், கேள்விகள் கேட்டு அந்த கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. 500 நர்ஸ்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 140 பேர்தான் பணியாற்றுகிறார்கள். அதனால் பணிச்சுமையால் அவர்கள் அழுகிறார்கள். அந்தப் பணியிடங்களை நிரப்ப கோப்புகளை அனுப்பினாலும் திருப்பி அனுப்புகிறார்கள். இதனால் ஏழைகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று முதலமைச்சரான நானே கூறுகிறேன்.
அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைக்காததால் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடியவில்லை. இதனால் நிர்வாகத்தில் நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன. எனவே பணி நியமன கோப்புகள் சுற்றி வருவதாக கதை சொல்லும் வேலை இருக்கக் கூடாது.

துறையின் அமைச்சராக இருந்துகொண்டு இதை சொல்கிறேன் என்றால் எனக்கு எவ்வளவு சங்கடங்கள் இருக்கும் ? முதலமைச்சரான நானே அனுமதி கொடுக்கும்போது நிர்வாகத்தில் ஏன் இது பெரிய குறையாக இருக்கிறது என தெரியவில்லை. இதையெல்லாம் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் துறை சார்ந்த அனைவரும் இங்கு இருக்கிறீர்கள். ஆனாலும் பலவற்றை நாம் செய்து வருகிறோம். குறைபாடுகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். பிற மாநிலங்களைக் காட்டிலும் நாம் அதிகமாக செய்கிறோம். அதனால் சுகாதாரப் பணியாளர்கள் கவலையின்றி செயல்பட்டு, மக்களின் பாராட்டைப் பெற வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இப்படியான விழாவை மடுகரை, நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் நடத்த வேண்டும்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
