20
April, 2025

A News 365Times Venture

20
Sunday
April, 2025

A News 365Times Venture

பிஜு பட்நாயக்: உயரம் கருதி அல்ல, உன்னதம் கருதி… `உயர்ந்த மனிதன்’ | `The Tall Man – Biju Patnaik'

Date:

இன்று ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் பிறந்தநாள். ஆனந்த விகடனில் வெளியான ‘தமிழ் நெடுஞ்சாலை’ தொடரில் அவர் பற்றி ஒடிசா முதல்வரின் முதன்மை ஆலோசகராக இருந்த, ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரை.

உயர்ந்த மனிதன் பிஜு பட்நாயக்!

1994 பிப்ரவரி 14. ஒன்றிய அரசுப் பணி நியமன ஆணை வந்துவிட்டது. முதலமைச்சர் பிஜு பட்நாயக்கிடம் விடைபெறச் சென்றேன். “பாலா, நீ போகப்போவதில்லை. டிக்கெட்டை கேன்சல் செய்துவிடலாம்” என்றார். “சார்..வீட்டுப்பொருள் எல்லாம் பேக் பண்ணி லாரியில் அனுப்பத் தயாராக இருக்கிறது” என்றதற்கு “அதனால் என்ன, பிரித்துப்போட்டால் போகிறது” என்றார். பயந்துவிட்டேன். அவர் சத்தமாகச் சிரித்ததும்தான் மூச்சு வந்தது.

அந்த 90 நிமிட உரையாடல் நினைவுகளின் உள்ளடுக்குகளில் உட்கார்ந்திருக்கிறது. தேநீர் வந்ததும் கையில் எடுத்து எவ்வளவு சர்க்கரை என்று ஆங்கிலத்தில் கேட்டார். “தேட் சம்மச்” (ஒன்றரை ஸ்பூன்) என்று ஒடியாவில் சொன்னேன். கலந்து நீட்டினார்.

“சென்னை போஸ்டிங் எத்தனை ஆண்டுகள்? நீ எப்போது ஒடிசா திரும்புவாய்?”

“நான்கு ஆண்டுகள் சார். 1998 தொடக்கத்தில் திரும்புவேன்.”

“ஓ… அப்போது நான் இருக்க மாட்டேன்.”

“நீங்கள் அப்போது முதல் அமைச்சராக இல்லாமல் போகலாம். ஆனால் நான் உங்களை சந்திப்பேன்.”

“கம் ஆன். நான் முதலமைச்சராக இருப்பதைப் பற்றிச் சொல்லவில்லை. நான் இருக்கமாட்டேன் என்று சொல்கிறேன்” என்று அழுத்திச் சொன்னார்.

அந்த உரையாடல் அப்படி முடிந்ததில் இறுக்கமாக உணர்ந்தேன். 1997 ஏப்ரல் 17. பிஜு பட்நாயக் காலமானார். அப்போதே ஒரு தமிழ் நாளிதழில் ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். மறுயோசனையில் எழுதவில்லை.

Balakrishnan IAS

பிஜுபட்நாயக் உத்தரப்பிர தேசத்தில் பிறந்திருந்தால் இரண்டு முறையாவது இந்தியாவின் பிரதமராகியிருப்பார். தமிழ்நாட்டிலோ ஆந்திராவிலோ பிறந்திருந்தால் அவரது வாழ்க்கை சாகசங்கள் குறைந்தது மூன்று திரைப்படங்களாகியிருக்கும்.

கல்லூரியில் படிக்கும்போது இரண்டு நண்பர்களோடு கட்டாக்கிலிருந்து பெஷாவருக்கு (இப்போது பாகிஸ்தான்) 2,500 கி.மீ சைக்கிளில் சென்றவர். 1930களில் இந்தியச் சாலைகள் எப்படி இருந்திருக்கும்?

1947-ல் நேருவின் வேண்டுகோளை ஏற்று தனது சொந்த விமானத்தில் இந்தோனேசியா சென்று டச்சுப் படைகளுக்குத் தெரியாமல் அந்நாட்டின் தேசியத்தலைவர்கள் இருவரை பத்திரமாக டெல்லிக்குக் கொண்டுவந்தவர்.

வாழ்க்கை வினோதமானது. 1986-ம் ஆண்டு. பிஜு பட்நாயக் எனது சப்-டிவிஷனில் முன் அனுமதி இல்லாமல் விமானத்தில் வந்து இறங்கியது பற்றி விசாரணை செய்து அறிக்கை அனுப்ப அரசு ஆணை. நான் காலியாபாணி குரோமைட் சுரங்கப் பகுதிக்கு ஜீப்பில் சென்றேன். டாடா நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்தோன். “விமானம் இறங்கியதும் அவரைச் சந்தித்து ‘வணக்கம்’ சொன்னோம். அனுமதி இல்லாமல் அவர் இறங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அதற்கு அவர், ‘நான் பிஜு பட்நாயக்’ என்று சொன்னார். அதற்கு மேல் நாங்களும் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பொதுநிகழ்ச்சிக்குப் போனார்.”

எனது ‘விசாரணை’ அறிக்கை அரைப் பக்கம்கூட இருக்காது. அது ஒரு ‘சும்மானாச்சுக்கும்’ விசாரணை என்பதுதான் அரசின் புரிதலும். அதுதான் பிஜு பட்நாயக். இத்தனைக்கும் அவர் எதிர்க்கட்சி.

1963-ல் ‘காமராஜ் பிளான்’படி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிஜு பட்நாயக் 27 ஆண்டுகள் கழித்து 1990-ல் மீண்டும் முதல்வரானார். அப்போது இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை வாபஸ் ஆனது. நூற்றுக்கணக்கான தமிழர்கள், சில தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்தனர். பிரதமர் வி.பி. சிங்கின் வேண்டுகோளை ஏற்று அவர்களை ஒடிசாவில் தங்கவைக்க பிஜு பட்நாயக் ஒப்புக் கொண்டார். “நீங்கள் தமிழர். அதனால் மல்கான்கிரிக்குச் சென்று முகாம்களை ஒருங்கிணைக்கும் பணியில் உதவுங்கள்” என்று தொலைபேசியில் பணித்தார். ஒருவாரம் கழித்து மீண்டும் அழைத்துப் பேசினார்.

அடுத்த சில மாதங்களில் கட்டாக்கிலுள்ள ஒடிசா மாநில நிதி நிறுவனத்தின் செயல் இயக்குநராக என்னை நியமித்தார். எட்டு மாதங்களில் மேலாண்மை இயக்குநராகப் பணி உயர்த்தினார். அப்போது அந்தப் பதவியில் இருந்தவர் மிகவும் சீனியர். அவருக்கு முன்பு அந்தப் பொறுப்பிலிருந்தவர் என்னைவிட 22 ஆண்டுகள் பணியில் மூத்தவர். அரசு வட்டாரத்தில் புருவங்கள் உயர்ந்தன. எனக்கும் குழப்பமாக இருந்தது. இந்த நியமனத்தை எதிர்த்து தலைமைச் செயலருக்கு எழுதினேன். முதல்வர் அலுவலகத்தில் கூப்பிட்டார்கள். முதன்மைச் செயலரே என்னை முதல்வர் அறைக்குள் அழைத்துச் சென்றார்.

“இது என்ன கடிதம். இன்னும் உனக்குத் தலை நரைக்கவில்லை என்பதுதான் பிரச்னையா? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் எனக்குத் தெரியாதா… கோ அண்ட் டேக் ஓவர்” என்றார் முதல்வர் கறாராக.

திகைப்புடன் நின்ற நான் ஏதோ குருட்டு தைரியத்தில் “நிறுவனம் மிக மோசமான நிலையில் உள்ளது. நான் எம்.டி ஆகவேண்டு மென்றால் நான் இப்போது வகிக்கும் பொறுப்பிற்கு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நான்தான் தேர்ந்தெடுப்பேன். எனது நிர்வாகத்தில் யாரும் எந்தத் தலையீடும் செய்யக்கூடாது. அப்படித் தலையிட்டால் வேலையை விட்டுப் போய்விடுவேன்” என்றேன்.

முதன்மைச் செயலர் கொதித்து விட்டார், “பாலா, யாரிடம் என்ன பேசுகிறாய்?” என்று. ஆனால் முதல்வர், “ஓ.கே ஏற்றுக்கொள்கிறேன். வேறு என்ன?” என்று கேட்டார். படபடப்பாக இருந்தேன். திடீரென்று “நான் காமராஜர் சொல்லி ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவன்” என்று சொன்னேன். நின்றுகொண்டிருந்த என்னை உட்காரச் சொன்னார்.

“தண்ணீர் குடிக்கிறாயா” என்று கேட்டார். வாங்கிக் குடித்தேன்.

நிதி நிறுவன மேலாண்மை புதிய அனுபவம். பல புதிய முன்னெடுப்புகள், நடவடிக்கைகள். முனைப்புள்ளவர்களைத் தேடித்தேடிக் கடன் கொடுத்தோம். கடன் வசூலிப்பில் மிகமிகக் கண்டிப்பாக இருந்தோம். கடன் மீட்பு மூன்று மடங்கு உயர்ந்தது. மாநில அரசின் உத்தரவாதத்துடன் நீண்டகாலக் கடன் பத்திரங்கள் மூலம் கூடுதல் நிதி திரட்டினோம். இந்தியாவிலுள்ள அனைத்து அரசு நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

பிஜு பட்நாயக்

மும்பையில் மதிய விருந்தளித்த ஐ.டி.பி.ஐ வங்கித் தலைவர் எஸ்.எஸ்.நட்கர்னி, “நீங்கள் சார்ட்டட் அக்கவுன்டன்ட் என்று நினைத்தேன்” என்று விளையாட்டாகக் கூறினாலும், வங்கியில் உயர் பொறுப்பில் சேரத் தயாரா’ என்று கேட்டதும் வியப்பில் உறைந்தேன். நெடுநல்வாடைக்கும் நிதித்துறைக்கும் நெடுந்தூரம்தான். ஆனால் அது கடக்க முடியாத தூரமில்லை.

இடைத்தரகர்கள் கடுப்பாவதும் இயற்கைதானே! எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. ஆளும் கட்சியின் தொழில் பிரிவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அனுப்பியிருந்தார். முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன். மறுநாள் முதன்மைச் செயலர் என்னிடம் கூறினார். “பாலா, கடிதத்தை முதல்வரிடம் காட்டினேன். அந்த ஆள் இங்கு வரும்போது ஓங்கி ஓர் அறைவிட விரும்புகிறார்.” அந்தத் தகவல் காற்றில் கசிந்தது. இடைத்தரகர்கள் அனைவரும் கப்-சிப்.

1992-ல் ஓர் அறுவைச்சிகிச்சை. அதற்குப் பின்பு அனிச்சையாக தசைத்துடிப்பு. மருத்துவர்கள் ஏதேதோ சொன்னார்கள். சென்னை செல்ல மருத்துவ விடுப்பு கேட்டேன். ”அமெரிக்காவுக்கு அனுப்புகிறேன். நானே ஏற்பாடு செய்கிறேன்” என்றார் முதல்வர். நன்றி சொல்லி மறுத்துவிட்டு சென்னை டாக்டரைச் சந்தித்தேன். நான் ஒடிசா திரும்பியும் அவர் விடவில்லை. கூடுதலாக ஹோமியோபதியும் நல்லது என்று இந்தியாவின் தலைசிறந்த ஹோமியோபதி மருத்துவர் ஜுகல் கிஷோரிடம் தொலைபேசியில் பேசினார். அந்த டாக்டரை டெல்லியில் சந்தித்தேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1972-ல் உடைந்தது பற்றி அவருக்கு வருத்தம். 1979 செப்டம்பர் 12-ம் தேதி இணைப்பு முயற்சியில் சென்னை சென்றது பற்றி என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டார். “சார், நீங்கள் என்னிடம் நீண்ட நேரம் பேசுவது பற்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் வியப்படைகிறார்கள். நீங்கள் காமராஜர், திராவிட அரசியல், உலக விஷயங்கள் பேசுகிறீர்கள். அவர்கள் உள்ளூர்ப் பிரச்னையோ என்று கலவரமடைகிறார்கள். எனக்கு சங்கடமாக இருக்கிறது” என்றேன். “அப்படியா” என்று பலமாகச் சிரித்தவர், “நினைத்துவிட்டுப் போகட்டும்” என்றார்.

“பாலா, உனக்கு முதல்வர் ஒரு பட்டப்பெயர் வைத்திருக்கிறார்” என்றார் முதன்மைச் செயலாளர். “என்ன சார்” என்று கேட்டேன். “கோரமண்டல் எக்ஸ்பிரஸ்” என்றார்.

கருணாநிதி – பிஜு பட்நாயக் – எம்.ஜி.ஆர்

பிஜு பட்நாயக் ஈர்ப்புவிசையை மீறி எழுந்து பறந்து வானத்தை வசப்படுத்தியவர். டாடா, டால்மியா போன்ற பெரு நிறுவனங்களே ஈடுபட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தொழிலில் இறங்கி 1946-ல் ‘கலிங்கா ஏர்லைன்ஸ்’ தொடங்கிய துணிச்சலை என்ன சொல்வது? 1950-ல் அறிவியல் மனப்பாங்கை வளர்க்க யுனெஸ்கோ மூலம் சொந்தப் பணத்தில் ‘கலிங்கா விருது’ நிறுவத் தூண்டிய விசை எது? 1961லிருந்து 1963 வரை முதல்வராக இருந்த குறுகிய காலத்தில் செய்த சாதனைப் பட்டியல் எவ்வளவு நீளமானது?

2016-ம் ஆண்டு பிஜு பட்நாயக்கின் நூற்றாண்டு விழாக் குழுவின் ஆலோசனைக் கூட்டம். பிஜு பட்நாயக் வாழ்க்கை பற்றிய சிறப்பான ஆவண நூலின் அவசியம் பற்றிப் பேசினோம். இதை முழு அர்ப்பணிப்போடு செய்து முடிக்கக் கூடியவர் யார்? சென்னை ரோஜா முத்தையா நூலக இயக்குநர் சுந்தர் நினைவுக்கு வந்தார்.

2018-ம் ஆண்டு ஜனவரி 27. உத்கல் திறந்தவெளி அரங்கம். ‘The Tall Man – Biju Patnaik’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. முதல்வர் நவீன் பட்நாயக் தலைமை. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவ கௌடா, முன்னாள் துணைப் பிரதமர் எல். கே. அத்வானி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்ட அருமையான நிகழ்வு. உலகம் முழுவதுமிருந்தும் சுந்தர் திரட்டிய ஆவணங்கள். அரிய படங்கள்.

1997-ல் கட்டுரை எழுதாத வருத்தம் ‘உயர்ந்த மனிதன்’ நூல் வெளியீட்டில் தணிந்தது. இப்போது ‘தமிழ் நெடுஞ்சாலை’யில் முற்றிலும் மறைந்தது.

1962-ல் பிஜு பட்நாயக் முதல்வராக இருந்தபோது அவரது கழுத்துத் தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சைக்காக சென்னை அரசினர் மருத்துவமனைக்குச் சென்றார். அறுவைச் சிகிச்சை செய்தவர், நரம்பியல் நிபுணர் பி.ராமமூர்த்தி. அப்போது எடுத்த அரிய புகைப்படங்களை அண்மையில்தான் பார்த்தேன். தான் முதல்வராக இருக்கும்போது அறுவைச் சிகிச்சைக்கு சென்னை சென்றவர், என்னை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்புகிறேன் என்றதை நினைத்துப் பார்க்கிறேன்.

‘உயர்ந்த மனிதன் பிஜு பட்நாயக்’ அது அவரின் 6 அடி 2 அங்குல உயரம் கருதியது அல்ல; உன்னதம் கருதிய உருவகம். சிறியன சிந்தியாதவர்; ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று நான் படித்துப் பழகிய பாரதி வரியை எனக்குள் பழக்கமாய் விதைத்த மாமனிதர்.

இருந்தாலும், இன்றுவரை புரியவில்லை. எனக்கு அவர் ஏன் அவ்வளவு ‘இடம்’ கொடுத்தார்..!

பைலட் பிஜு பட்நாயக்

1937-ல் 21 வயதில் பைலட் லைசென்ஸ். இந்தியன் நேஷனல் ஏர்வேஸ் விமானி. இரண்டாம் உலகப்போரின்போது நாஜிப்படைகள் ஸ்டாலின்கிராட் நகரை முற்றுகையிட்டபோது ரஷ்யாவின் செம்படைக்கு ஆயுத சப்ளை, பர்மாவை ஜப்பான் கைப்பற்றியபோது இந்தியர்கள் பலரை பத்திரமாக இந்தியா கொண்டுவந்து சேர்த்தார். 1947-ல் இந்தோனேசியாவிற்குச் சென்று டச்சுப்படைகளின் கண்காணிப்பை மீறி இந்தோனேசியப் பிரதமரையும் துணை அதிபரையும் டெல்லிக்குக் கொண்டுவந்தார். இந்த சாகசத்தைச் செய்தபோது அவர் ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்.

1947-48 இந்தியா- பாகிஸ்தான் போரின்போது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கிய முதல் சிவில் விமானம் பட்நாயக்கின் விமானம்தான். 17 வீரர்களை அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டுசென்றார். இந்தியா – சீனா போருக்கு முன்பு அசாமிலிருந்து ராணுவ வீரர்களின் குடும்பங்களை வேறு இடங்களுக்குக் கொண்டு சேர்த்தார். முக்கியமான தலைவர்களை ரகசியமாக விமானத்தில் அழைத்துச் சென்றதற்காக பிரிட்டிஷ் அரசு பிஜு பட்நாயக்கை 1943-ல் கைது செய்து லாகூரில் இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றிச் சிறையிலடைத்தது. பிஜு பட்நாயக் 1997-ல் மறைந்தபோது ‘இந்தியாவின் துணிச்சல்மிக்க தேசபக்த-விமானி’ என்று தலைப்பிட்டு அஞ்சலி செலுத்தியது ‘தி நியூயார்க் டைம்ஸ்.’

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதிமுக: "மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை" – வெடிக்கும் துரை வைகோ

ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.,யும் வைகோவின் மகனுமான...

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில்,...

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' – நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு...

கோவையில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு; அண்ணாமலை மிஸ்ஸிங் டு மேடையில் வெளியான அறிவிப்பு!

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கோவை காளப்பட்டி...