உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் நேற்று (அக்டோபர் 7) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அது “துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள சில பெருமுதலாளிகள் எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.
அவர்கள் யார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.
இது இந்திய மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு குற்றம்” என்று கூறியிருந்தது.
இதையடுத்து இந்தியாவில் யார் ஸ்டார்லிங்க்கைத் தடுப்பது… அந்தப் பெருமுதலாளி யார் போன்ற கேள்விகளை எழுப்பியது.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக இந்தியத் தகவல் தொடர்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சேவைகளுக்கான அரசாங்க விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் நியாயமற்ற முறையில், சிலருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பரவி வருகிறது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சேவைகள் உட்பட அனைத்துத் தொலைத்தொடர்புச் சேவைகளுக்கும் மத்திய அரசு முற்றிலும் நியாயமான, எந்தவொரு பாகுபாடும் இல்லாத ஒரு அனுமதி வழங்கும் நடைமுறையையே உருவாக்கியுள்ளது.
விதிமுறைகளுக்கு உட்பட்டு…
இதன் கீழ், குறைந்த புவி வட்டப்பாதை மூலம் சேவை வழங்கும் மூன்று ‘செயற்கைக்கோள் வழியிலான உலகளாவிய மொபைல் தகவல் தொடர்பு சாதனங்கள்’ (GMPCS) நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உரிமத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளின்படி, அனுமதி பெற்ற ஒவ்வொரு நிறுவனமும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யவே…
பயனர்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்த மூன்று உரிமதாரர்களிடமும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான பரிசீலனை ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.
ஒரு நிறுவனத்திற்கான இந்தப் பாதுகாப்புச் சரிபார்ப்பு நடைமுறை முழுமையாக முடிவடைந்த பின்னரே, அது அலைக்கற்றை ஒதுக்கீடு பெறும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். தற்போது இந்த மூன்று நிறுவனங்களுமே ஒரே விதமான அரசு அனுமதி நிலைகளில்தான் உள்ளன.
எனவே, இந்த விதிமுறைகளோ அல்லது அதன் பயன்பாடோ பாகுபாடானது அல்லது நியாயமற்றது என்று கூறுவது முற்றிலும் ஆதாரமற்றதும் தவறானதுமாகும்.”




