தேனியைச் சேர்ந்தவர் மூக்கன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவருக்கு 1991-ல் அரண்மனை புதூர் விலக்கு அருகே ராஜாகளம் என்ற பகுதியில் 40 சென்ட் பஞ்சமி நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை மூக்கன் 2008-ல் பட்டியலினத்தை சாராத ஹரிசங்கர் என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தன் பெயரில் பட்டா வாங்கியுள்ளார். அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள பண்ணைவீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “சம்பந்தப்பட்ட இடம் பஞ்சமி நிலம் கிடையாது. நிலஉச்சவரம்பில் ஒதுக்கப்பட்ட மிகை நிலத்தில் இருந்து பட்டியலினத்தவருக்கு 1984-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் ஹரிசங்கருக்கு எழுதி கொடுத்துவிடுகிறார். அவரிடம் இருந்து சுப்புராஜ் என்பவர் வாங்க, சுப்புராஜிடம் இருந்து 2022-ல் இருந்து நான் வாங்கினேன். அந்த இடம் ஆதிதிராவிடருக்கு கொடுக்கப்பட்ட இடம் என்பதை அறிந்து 7 மாதங்களில் வாங்கியவரிடமே திரும்ப கொடுத்துவிட்டேன். அந்த இடத்துக்கு என் பெயரில் பட்டா பெறவில்லை. இன்றும் கூட அந்த நிலம் தொடர்பான விசாரணை மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் நடந்து வருகிறது. அதுதொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை. எனவே பஞ்சமி நிலத்தை என் பெயரில் பட்டா பெற்றுள்ளேன் என்ற செய்தியில் உண்மையில்லை” என்றார்.
`தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம்உண்டு’
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக சட்ட விதிகளின் படி அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற வேண்டும் என்பது சட்டம். இந்த சட்ட விதியை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த விதியில் திருத்தங்களை மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். இது சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதை தான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். இது போன்ற விதிமீறல்கள் நடைபெறுகிறபோது தேர்தல் ஆணையம் தலையிடுவதற்கு அதிகாரம் உள்ளது. அதை தான் எங்கள் தரப்பு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தேர்தல் ஆணையம் தலையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது நீக்கப்பட்டுள்ளது.

`கட்சி ஒன்றாக இருந்தால் தான் வெற்றி..’
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு விதை போட்டது ஜெயலலிதா தான், அந்த திட்டம் நிறைவேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வரும் அவர்தான், அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் பாராட்டு விழா எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது அதற்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். மற்றபடி கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் செங்கோட்டையன், நான் உள்பட டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என அனைவரும் கட்சி ஒன்றாக இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை தொடர்ந்து கூறி வருகிறோம்.
`பிரதமர் நரேந்திர மோடியை ஏன் பாராட்ட கூடாது?’
நடைபெற்ற பல தேர்தல்களில் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் தொண்டர்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள். ஆகையால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். மேலும் 140 கோடி மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். உலக நாடுகளே அவரது தலைமையை பாராட்டும் போது நாம் ஏன் பாராட்ட கூடாது?

`விஜயின் அரசியல் வருகை..’
விஜயின் அரசியல் வருகையை பொறுத்தவரை அவர் எந்த திசையில் பயணிக்க போகிறார் என்பதை பார்த்து மக்கள் அவரது வெற்றியை தீர்மானிப்பார்கள்.
`திராவிட இயக்கத்தின் வரலாறு பெரியார் தான்’
திராவிட இயக்கங்களின் தலைக்காவிரியே பெரியார் தான், பல்வேறு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். ஆனால் அவரது கடவுள் மறுப்பு கொள்கையை அம்மா ஜெயலலிதா ஏற்றதில்லை, அதேபோல் அவரிடம் பலருக்கு பல கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் ஆனால் என்றும் திராவிட இயக்கத்தின் வரலாறு பெரியார் தான் அப்படி இருக்கையில் அதிலிருந்து நாங்கள் எப்படி மாறுபட முடியும். நாட்டிற்கு நல்லது செய்தால் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.