தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த வருடம் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏராளமானோர் அடுத்தடுத்து கைதான நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டார். கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார். இனி அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தை கவனித்து கொள்வதிலும் முழுமையாக கவனம் செலுத்துவார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு, பொற்கொடி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கட்சிக்குள் உள்கட்சி பூசல் தலைதூக்கி வரும் நிலையில், பொற்கொடி குறித்த இந்த அறிவிப்பு மேலும் சலசலப்பையே அதிகப்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
