சமீபத்தில், விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெண்கள், சைவம், வைணவத்தைப் பற்றி கொச்சயாக பேசியிருந்தார் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி. சர்ச்சை பேச்சு இவருக்கு புதிது அல்ல.
அவர் விழுப்புரத்தில் பேசியிருந்த வீடியோ வைரலாக, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதையொட்டி, நேற்று, அவரிடம் இருந்த திமுகவின் துணை பொதுச்செயலாளர் என்னும் பதவி பறிக்கப்பட்டது. இவருக்கு பதிலாக, அந்தப் பதவியில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், பொன்முடி தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொன்முடியின் அறிக்கை
“தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.
மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.