30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

தெலங்கானா சதுரங்கம்: முக்கோண வலையில் BRS; 'செக்' வைத்திருக்கும் மகள்… தப்புவாரா கே.சி.ஆர்?

Date:

“நான் ஆயிரம் முறை மறுபிறவி எடுக்க நேர்ந்தாலும் கூட, தெலங்கானாவிற்காகப் போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்தமாட்டேன். என்னை எதிர்ப்பவர்கள் நூறு பிறவிகள் எடுத்தாலும், என்னைப் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது” என ஜக்தியால் மாவட்டத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றினார் தெலங்கானாவின் அடையாள முகமான கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ்.

2001-ம் ஆண்டு ஆந்திராவிலிருந்து தெலங்கானாவை பிரித்து தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சியைத் தொடங்கியவர் சந்திரசேகர ராவ். சுமார் 13 ஆண்டுக்காலப் போராட்டத்துக்குப் பிறகு 2014 ஜூலை 2 அன்று உருவானது தெலங்கானா. அதைத் தொடர்ந்து நடந்த 2014, 2018 என இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் சந்திரசேகர ராவுக்கே அதிகாரத்தைக் கொடுத்து அழகுபார்த்தது தெலங்கானா.

கே.சி.ஆர் – தெலங்கானா

மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 5, 2022 அன்று, டி.ஆர்.எஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘பாரத ராஷ்டிர சமிதி (BRS)’ என மாற்றி நாடு முழுவதும் தங்கள் கொள்கைகளை எடுத்துச் செல்ல கே.சி.ஆர். திட்டமிட்டார்.

அதேநேரம், அதிகாரத்தில் நிலைத்தப்பிறகு மக்களுடனான நெருக்கத்தைவிட்டு கே.சி.ஆர் விலகத் தொடங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொகுதி மக்களும்,தெலங்கானா மக்களும் மட்டுமல்லாமல், கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கூட கே.சி.ஆர் தொடர்புகொள்ள முடியாதவராக இருந்தார்.

டி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் பி.ஆர்.எஸ் தலைவர் ஒருவர், ‘கே.சி.ஆருடன் எந்தவொரு தகவல் தொடர்பும் அவரது மகன் கே.டி. ராமராவ் அல்லது கே.சி.ஆரின் மருமகன் ஹரிஷ் ராவ் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது’ என பகிரங்கமாகவே அதிருப்திகளைத் தெரிவித்திருந்தார். 2023 சட்டமன்றாத் தேர்தலில் காங்கிரஸ் பி.ஆர்.எஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும், ‘பண்ணையார்கள்’ என விமர்சித்து பிரசாரத்தை முன்னெடுத்தது. அதேநேரம் பி.ஆர்.எஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதும், பணக்காரர்களுக்கே அரசின் திட்டங்களில் முன்னுரிமைக் கொடுக்கப்பட்டதாகவும் தெலங்கானா மக்களிடம் அதிருப்தி அலை வீசியது.

கே.சி.ஆர் - தெலங்கானா
கே.சி.ஆர் – தெலங்கானா

வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் பி.ஆர்.எஸ் கட்சிக்காரர்களின் உறவினர்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல திட்டங்கள் பெயரளவிலேயே இருந்ததாகவும் மக்கள் வெதும்பினர்.

அதன் விளைவாகவே, தெலங்கானா மாநிலம் உருவானது முதல் கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கு, 2023 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அந்தப் பெரும்பான்மை அரசை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம் தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியமைத்ததுடன், ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

பி.ஆர்.எஸ் கட்சியின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல கட்சிப் பெயரை மாற்றிய கே.சி.ஆர். 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. மேலும், செகந்திராபாத் கண்டோன்மென்ட், ஜூபிலி ஹில்ஸ் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் கூட பி.ஆர்.எஸ் தோல்வியையே தழுவியது. 2025-ம் ஆண்டு நடந்த கிராம பஞ்சாயத்துத் தேர்தலிலும் காங்கிரஸின் கை ஓங்கியே இருந்தது.

இதற்கிடையில் பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். தொடர்ந்து, மாவட்ட அளவிலான, மாநில அளவிலாக நிர்வாகிகளின் விலகல் என ‘தனி மாநிலம்’ உரிமைக்காக தொடங்கப்பட்டக் கட்சியின் கூடாரம் மெல்ல காலியாகத் தொடங்கியது.

ராகுல் காந்தி - ரேவந்த் ரெட்டி - காங்கிரஸ்
ராகுல் காந்தி – ரேவந்த் ரெட்டி – காங்கிரஸ்

இந்த நிலையில்தான், கே.சி.ஆர் மகளும், நிஜாமாபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கல்வகுந்த்லா கவிதா, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 10 மாதங்களுக்கு முன்பு கட்சிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சிக்கு வெளியிலிருந்து அரசியல் விமர்சனங்களைச் செய்துவந்த அவர், கடந்த சனிக்கிழமை (25-ம் தேதி) ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ என்றப் புதியக் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.

அந்த விழா மேடையில், “தெலங்கானா ராஷ்டிர சேனா ஒரு ஆழமான நோக்கத்துடன் வந்துள்ளது . நல்லாட்சியின் மூலமாகவும், மக்கள் இயக்கங்களை அரசியலமைப்பு, அரசியல் அதிகாரத்துடன் இணைப்பதன் மூலமாகவும் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். அப்போதுதான் சமூக நீதியையும், நாம் அனைவரும் கனவு கண்ட தெலங்கானாவையும் அடைய முடியும்.” என உரையாற்றி, கே.சி.ஆர் ஆட்சியை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

கவிதா தனது புதிய கட்சிக்கு ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ என்று பெயரிட்டிருப்பது வெறும் தற்செயலான தேர்வு அல்ல. அது ஒரு நுட்பமான அரசியல் உத்தி. கே.சி.ஆர்-ன் பி.ஆர்.எஸ் கட்சியின் பழைய பெயரான டி.ஆர்.எஸ்-ஐ கவிதா கையில் எடுத்துக்கொள்வதன் மூலம், ‘தெலங்கானா இயக்கத்தின் உண்மையான வாரிசு நான்தான்’ என்ற செய்தியை நேரடியாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

TRS கவிதா - தெலங்கானா
TRS கவிதா – தெலங்கானா

தெலங்கானா போராட்டத்தின் உணர்வோடு இன்னும் அடையாளப்படுத்திக்கொள்ளும் பழைய தலைமுறை வாக்காளர்களுக்கு, ‘டி.ஆர்.எஸ்’ என்ற வார்த்தை மட்டுமே ஒரு உணர்வுபூர்வமான நெருக்கத்தை உருவாக்கும். குறிப்பாக, பி.ஆர்.எஸ் என்ற பெயர் மாற்றத்தை ஒரு தவறான முடிவாகப் பார்த்த தெலங்கானா அடையாள உணர்வாளர்களை நேரடியாக கவிதா குறிவைக்கிறார்.

மேலும், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கவிதா சிறையில் இருந்து திரும்பியிருப்பது அவருக்கு ஒரு ‘தியாகி’ என்ற பிம்பத்தைக் கொடுக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டும் போராடிய தலைவி என்ற உருவகம், குறிப்பாக இளம் வாக்காளர்களையும், பெண் வாக்காளர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நிலையில் கவிதாவின் கட்சியை ‘குடும்பத்திற்குள் ஒரு சிறிய பிளவு’ என்று இலகுவாக நிராகரிக்க முடியாது. அது பி.ஆர்.எஸ்-ன் மையமான வாக்கு வங்கியை நேரடியாக இரண்டாகப் பிளக்கும் அபாயமுள்ள அரசியல் சவாலாகும்.

TRS கவிதா - தெலங்கானா
TRS கவிதா – தெலங்கானா

இத்தனை சிக்கலையும் மனதில் வைத்துதான், கவிதா கட்சி தொடங்குவதற்கு 5 நாளுக்கு முன்பே கே.சி.ஆர் ஜக்தியால் மாவட்டத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கே.சி.ஆர் கலந்துகொண்டு தற்போதைய அரசைக் கடுமையாக விமர்சிப்பார். கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் கட்சியின் சிக்கல்கள் குறித்து பேசுவார் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொண்டர்கள் முன் தோன்றி உரையாற்றிய கே.சி.ஆர், தற்போதைய காங்கிரஸ் அரசை நேரடியாகத் தாக்காமல் “குழப்பமான நிர்வாகம்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, “காங்கிரஸ் கட்சி அளித்த ஆறு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் ‘போலி’யானவை. அவற்றைச் செயல்படுத்தாததால் மக்கள் தற்போது ஒரு தவறான தேர்வினை செய்துவிட்டதாக உணர்ந்து பரிதாப நிலையில் இருக்கிறார்கள். தெலங்கானா மக்களின் பிதாவான (சமூகத்தின் தந்தை) நான், மாநிலத்தின் நலனுக்காக மீண்டும் ஒருமுறை களத்தில் நின்று போராடத் தயாராக இருக்கிறேன். ஓராண்டு காலம் பண்ணை வீட்டிலேயே முடங்கியிருந்தது, காங்கிரஸ் அரசு மக்களுக்கு ஏதேனும் நன்மைகளைச் செய்கிறதா என்று பார்ப்பதற்காக வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு மட்டுமே! ஆனால், துரதிஷ்டமாக அவர்கள் எந்த நன்மையையும் செய்யவில்லை.” எனக் குறிப்பிட்டு பேசிய அவர், சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார். அந்த உரையில், 2014 முதல் 2023 வரையிலான தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார்.

தந்தை சந்திரசேகர ராவுடன் மகள் கவிதா
தந்தை சந்திரசேகர ராவுடன் மகள் கவிதா

கே.சி.ஆர்-ன் இந்த அரசியல் மறுபிரவேசம் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஒரு மிக முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2024-ல் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு மாறியது, சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி சந்தித்த பின்னடைவு ஆகியவற்றால் தொண்டர்கள் மத்தியில் நிலவிய சோர்வை நீக்க கே.சி.ஆரின் வருகை அவசியம் எனத் தலைவர்கள் கருதினர். அதை நிறைவேற்றும் வகையிலும், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பி.ஆர்.எஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கும் வகையிலும் அவரின் உரை அமைந்திருந்தது.

அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, கே.சி.ஆரின் இந்தத் திடீர் வருகைக்கு அவரது மகள் கவிதா தொடங்கியுள்ள புதிய கட்சியும் ஒரு முக்கியக் காரணமாகும். அதனால்தான் தன் அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவும், கடந்தகால சாதனைகளை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கவும், 2028 தேர்தலுக்காக கே.சி.ஆர் முன்கூட்டியே களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

கட்சிப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 27 அன்று ஹைதராபாத்தில் அமைந்துள்ள பி.ஆர்.எஸ் தலைமையகமான ‘தெலங்கானா பவனில்’ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் கே.சி.ஆர் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தவும், மாவட்ட அளவில் கட்சியை மறுசீரமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார் என்றத் தகவல் வெளியாகியிருக்கிறது.

TRS கவிதா - தெலங்கானா
TRS கவிதா – தெலங்கானா

ஏற்கெனவே ஆட்சியைக் கைப்பற்றியதுடன், பி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ-களை கட்சிக்குள் இழுத்தது, தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் கட்சியின் பலத்தை நிரூபித்தது என காங்கிரஸ் தொடர்ந்து களமாடிவருகிறது. மற்றொருபுறம், மத்திய அரசில் ஆளும் கட்சியாக இருப்பதால், பா.ஜ.க தெலங்கானாவில் நிர்வாக அழுத்தங்கள் செலுத்தும் வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. 2023 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 8 இடங்களை மட்டுமே வென்றாலும், அந்தக் கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருந்தது. மேலும், பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பல முக்கியத் தலைவர்கள் நேரடியாக காங்கிரஸிற்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க-விலும் சேர்ந்திருக்கிறார்கள்.

இது பா.ஜ.க தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்-ன் சிதைந்த வாக்கு வங்கியை படிப்படியாக கவர முயல்கிறது என்பதன் அறிகுறி. எனவே, 2028 தேர்தலை நோக்கி நகரும் தெலங்கானா அரசியலில், காங்கிரஸ் vs பி.ஆர்.எஸ் என்ற இருமுனைப்போட்டி, பா.ஜ.க என முக்கோண போட்டியாக மாறினால், அது நேரடியாக பி.ஆர்.எஸ்-க்கே பாதிப்பை ஏற்படுத்தும். கவிதாவின் புதிய கட்சி இந்த சூழலில் வரும்போது, வாக்குகள் மூன்று அல்ல, நான்கு திசைகளில் சிதறும் அபாயம் உருவாகிறது. அதில் அதிகம் சிக்கலை சந்திக்கவிருப்பவர் கே.சி.ஆர்-தான். எனவே கவிதா தன் தந்தையின் மீது தொடுக்கும் இந்த நேரடித் தாக்குதல்களை கே.சி.ஆர் எப்படிக் கையாளப்போகிறார் என்பது வருங்கால அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’கட்சி போடுகிற பிச்சை' – துரை வைகோவின் வார்த்தையால் கூண்டோடு வெளியேறிய ஈரோடு நிர்வாகிகள்

ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை பேரூராட்சியின் துணைத் தலைவரும் மதிமுகவின் மாநில...

`திமுக வரக்கூடாது' – கலக்கத்தில் தவாக டு எதிர்ப்பு காட்டிய நிர்வாகி; அச்சத்தில் அமைச்சர்! | கழுகார்

கலக்கத்தில் த.வா.க"தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது!"தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என, அ.தி.மு.க-வினரைவிட அதிகமாக...

'எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்' அமெரிக்க டாலர், தங்க காசு, பாஸ்போர்ட் – அனைத்திலும் ட்ரம்ப்?

அமெரிக்கா முதல் உலக நாடுகள் வரை அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும்...