தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகளிர், மதுவிலக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார். அவரின் உரையில், “பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், கிராமப்புறங்களுக்குப் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. எனவே, கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும்.
அவற்றில் பெண்களை நடத்துநராகவும், ஓட்டுநராகவும் நியமித்து அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை 1989-ல் அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டுவந்தார்.
இருப்பினும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைப் பறிப்பது டாஸ்மாக் மதுக்கடைகளே ஆகும். 2025 தீபாவளிக்கு ரூ.789.95 கோடி, பொங்கலுக்கு ரூ.725.56 கோடி, புத்தாண்டுக்கு ரூ.100 கோடி என மக்கள் மதுவுக்காகச் செலவழித்துள்ளனர். பெண்களின் சேமிப்புப் பணம் அனைத்தும் டாஸ்மாக்கிற்குச் செல்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47-ன் படி, அரசே மது விற்பனை செய்ய உரிமையில்லை என உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன. எனவே, தமிழக அரசு உடனடியாக முழு மதுவிலக்கைக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 20 புதிய போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த வழக்குகளை விசாரிக்க பெண் நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் காவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்.
15-16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வரத் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கிற்கு குறைந்தபட்சம் ஒரு நாளாவது விடுமுறை அளிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் அவர்களின் குடும்பத்துடன் அந்த நாளை கொண்டாடுவார்கள்.

முதலமைச்சர் கோப்பைப் போட்டிகளில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல ஆணயத்தின் தலைவராக ஒரு மாற்றுத்திறனாளியையே நியமிக்க வேண்டும். கூட்டுறவுப் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தர்மபுரி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காவிரி – தர்மபுரி உபரிநீர் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இந்த உரைக்குப் பிறகு துணை சபாநாயகர் “ஒரு சட்டமன்ற உறுப்பினர், இந்த அவையில் 10 நிமிடங்களை எப்படி பயன்படுத்த வேண்டும். தான் தொகுதி மக்களுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என்பதையெல்லாம் மதிப்புக்குரிய சௌமியா அன்புமணி அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று பாராட்டினார்.




