நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்…
எளிமையான முகம், நகைச்சுவை கலந்த பேச்சு போன்றவையால் அரசியல் மட்டத்தில் நன்கு அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்கப்போவதாக சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வந்தன. இதோ, அதோ என அவரது விலகல் விவகாரம் நீண்ட இழுபறியாக இருந்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதன் மூலம் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காளியம்மாள்.
அவரது அறிவிப்பு அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. பலரும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால் காளியம்மாள் மற்றும் அவரது கணவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்து காளியம்மாள் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., த.வெ.க இதில் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பது போன்ற பேச்சுக்கள் கிளம்ப, ஆளாளக்கு ஒன்றை பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் காளியம்மாள் செயல்பாடுகள் குறித்து உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், “நாகப்பட்டினத்தில் காளியம்மாள் வசித்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட போது தனி திறன் பிரச்சாரத்தால் எல்லோர் மத்தியிலும் கவனம் பெற்றார். பின்னர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து முரணால் அமைதியானார். இப்படியான சூழலில் காளியம்மாள் த.வெ.க-வில் இணையப்போவதாக சொல்லப்பட்டன. ஆனால் எதையும் வெளிப்படையாக அவர் வாய் திறக்கவில்லை.
அமைச்சர் அன்பில் மகேஸ் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆன பிறகு அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளை தி.மு.க-விற்கு இழுக்க தூண்டில் வீசப்பட்டது. இது தொடர்பாக ராஜீவ்காந்தி மூலம் காளியம்மாளிடம் பேசப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நாகையில் அமைச்சர் அன்பில் மகேஸ், ராஜீவ்காந்தி, காளியம்மாள் உள்ளிட்டோர் சந்தித்து பேசி கொண்டதாக தகவல்கள் பரவின. இதை காளியம்மாள் மறுக்கவும் இல்லை.

பனையூர் பயணம்..
கிட்டத்தட்ட அவர் தி.மு.க-வில் இணையப்போவதாக தி.மு.கவினரே பேச ஆரம்பித்தனர். இதற்கிடையே த.வெ.க-வில் இருந்து அழைப்பு வர பனையூர் சென்ற காளியம்மாள் ஆனந்திடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தி.மு.க தரப்பிடம் எந்த ஒரு முடிவையும் சொல்லாமல் காளியம்மாள் இழுத்தடித்து வந்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் காளியம்மாள் தி.மு.க-வில் இணைந்திருப்பார். நாம் தமிழரில் இருந்த போது தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதையும் அவர் யோசித்தாக தெரிகிறது.
இந்த நிலையில் அவருடைய விலகல் எப்படி பேசு பொருளாக இருக்கிறதோ அதே மாதிரி மாற்றுக் கட்சியில் சேர்வதும் பேசு பொருளாக இருக்கும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும்” என்றனர்.
மேலும் சிலரோ, “தி.மு.க-வில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் அதன் பிறகு தன் முடிவை அவர் தெளிவாக சொல்லவில்லை. தி.மு.க-விடம் சில டிமாண்ட்கள் காளியம்மாள் வைக்க அதற்கு அவர்கள் கிட்டதட்ட ஓகே சொல்லி விட்டனர். அதே சமயத்தில் த.வெ.க-வுடனும் பேச்சு வார்த்தை நடத்தியதாக அவரது தரப்பை சேர்ந்தவர்களே பேசி வந்தனர். இப்படி இரு பக்கமும் வலையை வீசியதை தி.முக தரப்பு ரசிக்கவில்லை. காளியம்மாள் ஓவர் பில்டப் கொடுக்கிறார் அவரா ஒரு முடிவுக்கு வரட்டும் அதுவரை கண்டுகாதீங்கனு மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அன்பில் மகேஸ் சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் எந்த கட்சியில் இணைந்தால் தனக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதை காளியம்மாள் உணர்ந்திருக்கிறார். அதற்கேற்ற முடிவை அவர் எடுத்து விட்டார் என்கிறார்கள். ஒரு வேளை தி.மு.க-வில் அவர் இணைந்தால் நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காளியம்மாள் தான் என்கிறார்கள். இதனால் வேட்பாளர் கனவில் இருக்கும் மாவட்ட முக்கிய பிரமுகர் சற்றே கலக்கத்தில் உள்ளார்.
காளியம்மாள் விலகல் குறித்து ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு இது களையுதிர் காலம் என்றார் சீமான். ஆனால், கச்சிதமாக காய்களை நகர்த்தி அரசியலில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் காளியம்மாள். அவர் தி.மு.க-வில் சேர்வார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விட்டது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வரும்” என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
