திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவுக்கு ஆடு கோழி கொண்டு செல்லக் கூடாது, என்று காவல்துறை போட்ட உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் அதை எதிர்த்து இந்து இயக்கங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் – சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா
முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்திருக்கும் மலையின் மேலே சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவும் அமைந்துள்ளது.
கடந்த மாதம் இந்த தர்ஹாவில் கந்தூரி கொடுக்க ஆடு, சேவலுடன் வந்த இஸ்லாமிய குடும்பத்தினர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படதிலிருந்து பிரச்னை தொடங்கியது. தங்கள் வழிபாட்டு உரிமையை தடுப்பதாக திருப்பரங்குன்றம் ஜமாத் நிர்வாகிகளும் முஸ்லீம் லீக், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளும் அப்போதே போராட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகமோ ‘தர்ஹாவுக்கு வழிபடச் செல்வதை தடுக்கவில்லை. ஆடு, கோழி கொண்டு செல்வதைத்தான் தடுக்கிறோம்’ என்று அறிவிக்க, அதோடு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள், ‘திருப்பரங்குன்றம் மலை மீது உயிரினங்கள் பலி கொடுப்பதையும், அசைவம் சாப்பிவதையும் அரசு தடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்க என்று பிரச்னை பெரிதாகத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி ஆடு, கோழியுடன் கந்தூரி விழா நடத்த உள்ளதாக இஸ்லாமியஅமைப்பினர் அறிவிப்பு செய்து கிளம்பி வர, அதை எதிர்த்து இந்து முன்னணியினர் திரள, மலைக்கு மேல் ஆடு, கோழி கொண்டு செல்லாமல் காவல்துறை தடுக்க என திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ஏற்பட்டது.

தற்போது தர்ஹாவுக்கு ஆடு, கோழி கொண்டு செல்ல தடைவித்து மலையேறும் பகுதியில் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பில் இருந்து வருகிறது.
ஆனாலும், இரண்டு மத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தினமும் திருப்பரங்குன்றத்துக்கு வருவதும், அதிரடியாக பேசுவதும்தான் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வஃபு வாரியத் தலைவர் நவாஸ்கனி எம்.பி, திருப்பரங்குன்றம் மலையில் சென்று பார்வையிட அவருடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலையும், இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்ட, “நான் அங்கு உணவு சாப்பிடவில்லை, காவல்துறையினரிடம் அனுமதி பெற்று எங்கள் கட்சியினர் உணவு சாப்பிட்டார்கள்” என்று நவாஸ்கனி மறுக்க, அந்த பிரச்னையும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர மமக எம்.எல்.ஏ அப்துல் சமது மனு கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்காததால் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை.
இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்களை பார்ப்போம்..
டிசம்பர் 25 : திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்ஹாவுக்கு கந்துரி கொடுக்க ஆடு சேவலுடன் வந்த ராஜபாளையத்தை சேர்ந்த செய்யது அபுதாஹிர் குடும்பத்தினர் மலை அடிவாரத்தில் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். உடனே அவர்கள் அப்பகுதி இஸ்லாமியர்களுடன் சேர்ந்து மலை படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டம் நடத்த அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
ஜனவரி 5 : வழிபாட்டு உரிமை தடுக்கப்படுவதாக திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் ஜமாத் நிர்வாகிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட 450 பேர் கைது செயப்பட்டார்கள். இது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கண்டித்தார்.
ஜனவரி 12 : கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக்க முயற்சிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும், சைவ மலையின் புனிதத்தை கொடுக்கிறார்கள், இதை தடுத்தும், சமணப்படுகைகள் நிறைந்த மலை முழுவதையும் தொல்லியல் துறை கட்டுபாட்டில் கொண்டு வரவும் அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனவரி 18 : ஆடு கோழியுடன் கந்துரி விழா நடத்தி விருந்து விழா நடத்தபோவதாக அறிவித்ததால் மலையேறும் பகுதியில் காவல்துறையினர் குவிக்கபட்டு தடுக்கப்பட்டு, தர்ஹாவில் பிரார்த்தனை செய்ய செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நாளில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி திருப்பரங்குன்றம் வந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வேல் ஏந்தி முருகன் கோயிலுக்கு ஊர்வலம் சென்று வழிபட்டார். அப்போது பேசியவர், “30 ஆண்டுகளாக மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரிக்கை வைக்கபட்டும், நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அதை நிறைவேற்றவில்லை. திமுக, அதிமுக கட்சிகள் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. இங்கு ஆடு வெட்ட அனுமதிக்க கூடாது. புனிதமான திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்ற அனைத்து இந்து மக்களையும் இணைத்து தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
ஜனவரி 19 :
தடையை மீறி ஊர்வலம், போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்புகள் மீதும், இந்து முன்னணியினர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
ஜனவரி 20 :
மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளரும் மணப்பாறை எம்.எல்.ஏவுமான அப்துல் சமது கட்சியினருடன் வந்து திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவை பார்வையிட்டார். ” பல காலமாக இந்த தர்ஹா இந்துக்களும் இஸ்லாமியர்களும் வழிபடக்கூடிய இடமாக இருந்து வருகிறது. நேர்த்திக் கடனாக ஆடு, கோழி சமைத்து அனைவருக்கும் வழங்கும் நடைமுறை இங்கு இருந்து வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் இதை சர்ச்சையாக்குகிறார்கள். இது சிக்கந்தர் மலை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறபட்டுள்ளது. வட மாநிலத்தைப் போல தமிழகத்தை மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள். தர்ஹாவுக்கு வருகின்றவர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது. 1920 களிள் இந்த தர்ஹா குறித்து வந்த நீதிமன்ற தீர்ப்புகள் எங்களிடம் உள்ளது” என்றார்.

ஜனவரி 22 :
வஃபு வாரியத் தலைவரும் ராமநாதபுரம் எம்பி-யுமான நவாஸ்கனி திருப்பரங்குன்றம் வந்து ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், “நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மலைமீது தர்ஹாவும், காசி விசுவநாதர் கோயில் உள்ளது. அரசிதழில் தெரிவித்துள்ளபடி தர்ஹா அமைந்துள்ள 50 சென்ட் நிலம் வஃபு வாரியத்திற்கு உட்பட்டது. அதனால் தேவையற்ற அசவுகரியத்தை ஏற்படுத்தாமல் தீர்வு காண மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கைகளை வைத்தேன். சமைத்த அசைவ உணவை மலை மீது கொண்டு செல்லத் தடையில்லை என்று கூறியதால் மக்கள் சமைத்த உணவை கொண்டு சென்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
ஜனவரி 23 :
திருப்பரங்குன்றம் மலை மீது நவாஸ்கனி எம்பியுடன் சென்றவர்கள் அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் முருகன் கண்டனம் தெரிவித்திருந்தார். திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்டதன் மூலம் நவாஸ்கனி மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயலை செய்துள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்ட, “நான் அங்கு அசைவ உணவு சாப்பிடவில்லை. அதை அண்ணாமலை நிரூபித்தால் பதவி விலகுகிறேன்” என்று நவாஸ்கனி மறுத்தார்.
ஜனவரி 23 : திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா, “திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறிக்கொண்டு இங்கு வந்த நவாஸ்கனி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்றார்.
ஜனவரி 24 : திருப்பரங்குன்றம் வந்த சட்டமன்ற பாஜக தலைவர் நயினார், நவாஸ்கனி எம்பியும், அப்துல் சமது எம்.எல்.ஏவும் இங்கு வந்திருக்க கூடாது, அவர்கள் வந்ததால்தான் நான் இப்போது வந்தேன். திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை என்ன இருந்தததோ அதை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
நவாஸ்கனியை கடுமையாக பேசி திருப்பரங்குன்றத்திற்கு இரண்டு முறை செல்ல முயன்ற வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது.
இதற்கிடையே திருப்பரங்குன்றத்தை பாதுகாக்க வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி மிகப்பெரும் போராட்டத்தை இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “நீதிமன்ற உத்தரவுகளை ஆய்வு செய்து திருப்பரங்குன்றம் பிரச்னையை அரசு நடுநிலையோடு அணுகுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தர்ஹா பிரச்சனையில் அரசு இறுதியான அறிவிப்பை இதுவரையில் அறிவிக்காததால் இந்து இயக்கங்களும், இஸ்லாமிய அமைப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி, பதற்றத்தை அதிகரித்த வண்ணம் உள்ளனர் என வேதனை தெரிவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். !
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs