திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறியிருந்தது. ஏரியின் உட்புறம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலையோரங்களில் நெகிழிப் பைகள், மருத்துவக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் எனப் பல்வேறு கழிவுகள் குவிந்து கிடந்தன.
இப்படி குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரியை ஒட்டி ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்தக் குப்பைகளால் அப்பகுதி மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “இரவு நேரங்களில் சமூகப் பொறுப்பற்ற சிலர் குப்பைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு வந்து இங்கே போட்டுவிட்டுச் செல்கிறார்கள். வேலி அமைத்தும் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க முடியவில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக பொதுமக்களிடம் பேசியும் நேரடியாக ஸ்பாட் விசிட் செய்தும், இந்த அவல நிலை குறித்து விகடன் தளத்தில் ‘ஏரியா? குப்பைக் கிடங்கா?’ கழிவுகளால் மாசடைந்த திருப்பத்தூர் பெரிய ஏரி- நகராட்சியின் விளக்கம் என்ன? என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை நவம்பர் 15 அன்று வெளியிட்டிருந்தோம். மேலும், இந்தப் பிரச்னையை நகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தோம்.

இந்த நிலையில், விகடன் செய்தி எதிரொலியாக, செய்தி வெளியான ஒரே நாளில் 16/11/2026 அன்று ஏரியின் உட்புறம் மற்றும் சாலையோரங்களில் தேங்கியிருந்த குப்பைகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து அகற்றி, தூய்மைப்படுத்தியுள்ளது. மேலும், இனிமேல் இங்கு குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கண்காணிப்புக்கு ஆள் நியமிப்பதுடன், தடையை மீறிக் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.




