தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்திருக்கிறது.
இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.
ஒருவர் ஒரு தொகுதியின் எம்எல்ஏ- வாக மட்டுமே இருக்க முடியும் என்பதால், விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதல்வர் விஜய் நேரில் சென்றிருக்கிறார். முதல்வரான பிறகு விஜய் சந்திக்கும் முதல் மக்கள் சந்திப்பு இது. வழியெங்கும் மக்கள் திரண்டு வரவேற்றிருக்கின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், ” திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு என் சிறப்பான நன்றி. தமிழகத்திற்கு எப்படி திருச்சி இதயமோ அதே மாதிரி என்னுடைய இதயத்திற்கும் நீங்கள் நெருக்கம். 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வந்த அரைமணி நேரத்தில் தொடங்கிவிட்டார்கள்.
பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணா வழியில் நாம் இருக்கிறோம். 1977 தேர்தலை விட அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறோம். கோட், சூட் அணிவதையும் விமர்சிக்கிறார்கள். நான் என்ன கலர் கலராகவா அணிகிறேன். நான் இரண்டே கலர் அணிகிறேன். நம் மனது மாதிரி கறுப்பு வெள்ளை. தமிழ்நாட்டின் முதன்மை சேவகன் நான்.

இருவருக்கு இடையில்தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. திமுக நமக்கு செய்வது எல்லாம் நன்மைக்கே. ஜென்ஸியை கவர திமுக காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைத்தவர் தான் ஸ்டாலின். தற்குறி தற்குறி என்றவர்கள்தான் உங்கள் வாழ்க்கையை இப்போது கேள்விகுறியாக்கியிருக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டா நல்லவர்களா? எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?
ரீல்ஸ் போட்டவர்கள் நீயூஸ் பார்க்கிறார்கள். அண்ணா உருவாக்கிய திமுக கீழிறங்க யார் காரணம். நீங்கள் மக்களை தவறாக பேசினால் இந்த விஜய் கேள்வி கேட்பான். சும்மா இருக்க மாட்டான். சட்டமன்றத்தில் நடப்பதை இப்போது அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம். போதை பொருள் பழக்கத்தை உருவாக்கியவர்கள் நீங்கள். தொடக்கத்திலேயே நீங்கள் தடுக்கவில்லை.
சட்டம் ஒழுங்கு என் மீது பழி போடுவதா? சிங்கப்பெண் படை அடுத்த வாரம் அறிமுகம் ஆகும். தீய சக்தி, தீர்ந்து போன சக்தி. திமுக-வும், அதிமுக-வும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றனர். அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்தெறிந்திருக்கிறோம். திருச்சி கிழக்கு என் செல்லபிள்ளை மாதிரி. உங்களில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்” என்று பேசியிருக்கிறார்.




