தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். மதுரையில் முதல்வர் கால் பதித்தவுடனேயே அவரை நேரில் சந்தித்திருக்கிறார் பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியன். அதிமுக, திமுக என எல்லா கட்சிகளுக்கும் நெருக்கமாக இருந்த அன்புச் செழியன் இப்போது தவெகவையும் நெருங்குகிறாரா?
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். முன்னதாக அவரை தவெக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது சினிமா பைனான்சியரான அன்புச்செழியனும் முதல்வரை சந்தித்திருந்தார்.
அன்புச்செழியன் அம்மன் சிலை ஒன்றை முதல்வருக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். அன்புச்செழியன் ஏன் தவெகவுடன் நெருக்கம் காட்ட நினைக்கிறார் என்று மதுரை தவெக வட்டாரத்தில் விசாரித்தோம். ‘அன்புச்செழியன் எந்தக் கட்சிக்கும் எதிரானவராக தன்னைக் காட்டிக் கொள்ளமாட்டார். தன்னுடைய சினிமா பைனான்ஸ் தொழிலுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆளுங்கட்சிகளுடன் இணக்கமாகவே இருப்பார்.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அதிமுகவின் மேடைகளிலேயே ஏறியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் திமுகவின் முக்கியப் புள்ளிகள் அத்தனை பேருடனும் நல்ல தொடர்பில்தான் இருந்தார். விஜய் மதுரையில் மாநாடு போட்டு கூட்டம் காட்டியதை பார்த்தும், பிரசார பயணங்களில் அவருக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து அன்புச்செழியனின் மகன் விவேக் தவெகவில் இணைய நினைத்தார். கடைசி நேரத்தில் சில தொகுதிகளுக்கு வேட்பாளரை நிறுத்துவதிலேயே சிரமம் இருந்தது. விவேக் அன்புச்செழியன் ஆர்வமாக இருந்ததால் அவருக்கு மதுரை தெற்கில் விசில் சின்னத்தில் நிற்க சீட் கொடுக்க தலைமை தயாராக இருந்தது. அன்புச்செழியனும் மகனுக்காக களத்தில் இறங்க தயாரானார்.
அந்தத் தகவல்களை உளவுத்துறை மூலம் அறிந்த அப்போதைய ஆட்சியின் மேலிடம், அன்புச்செழியன் மகன் தவெகவில் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை. அந்தச் செய்தி அன்புச்செழியன் தரப்புக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு தவெக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் விவேக் அன்புச்செழியன் பின்வாங்கினார். விஜய்யின் சினிமா படங்கள் பலவற்றிற்கும் அன்புச்செழியன் பைனான்ஸ் செய்திருக்கிறார். அதனால் முன்பிருந்தே முதல்வருக்கு நெருக்கமானவர்தான் அன்புச்செழியன். தேர்தல் நேரத்தில் அரசியல்ரீதியாக நெருக்கமாக நினைத்தார். அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் அது நடக்காமல் போனது. இப்போது தவெக ஆளுங்கட்சியாகியிருக்கும் நிலையில் எந்த அழுத்தமும் இல்லாமல் வெளிப்படையாக நெருக்கம் காட்டுகிறார்’ என்கின்றனர்.




