சென்னை தரமணி, மத்திய தொழில்நுட்பக் கல்லூரி(CPT) நுழைவு வாயில் ஒட்டி பிரியும் சாலை, பரபரப்பான ராஜிவ் காந்தி சாலையையும், குடியிருப்பு பகுதிகளான ஸ்ரீராம் நகர் , பள்ளிப்பட்டு, களிகுன்றம் போன்ற பகுதிகளையும் இணைக்கும் இணைப்பு சாலையாக இருப்பதால்… எந்நேரமும் மக்கள் பயன்பாட்டிலும் பொதுப்பாதையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதிதாக இந்த சாலையில் நுழைபவர்களுக்கு ஏதோ மாநகராட்சிக் குப்பைக் கிடங்கிற்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகம் கண்டிப்பாக வந்துவிடும்.
காரணம், அந்த சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள். மத்திய தொழில்நுட்பக் கல்லூரி சுற்றுச்சுவர் ஒட்டியும், எதிர் புறமும் குவிந்து கிடக்கும் குப்பைகள், கடந்து செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது. கட்டட இடிபாடுகளில் கிடைக்கும் கழிவுகள் , கட்டட புனரமைப்பின் போது எடுக்கப்படும் சுண்ணாம்பு அட்டைகள் என டன் கணக்கில் இங்கே கொட்டிவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பயன்படுத்தும் BIOWASTE பிளாஸ்டிக் உறைகள் சில கழிவுகளுடனும், பயன்படுத்தாத ஏராளமான உறைகள், காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் முகப்பூச்சுகள் என இன்னொருபுறமும் ஏராளமாய் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுமானத்தின்போது தோண்டி எடுக்கப்படும் களிமண் குவியல் குவியலாக ஒருபுறமும், பயன்படுத்த முடியாத படுக்கைகள், தலையணைகள் என இன்னொரு புறமும் பகுதிவாரியாகத் தரம் பிரித்துக் கொட்டிவைப்பதைப் போன்று இந்த சாலையின் இரு புறங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் சாலைகளை ஆக்கிரமித்தவாறு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், எளிதில் கடந்து செல்ல முடியாத அளவிற்குச் சிரமங்கள் ஏற்படுவதாக இந்த சாலையைக் கடந்து செல்வோர் கூறுகிறார்கள்.

இந்த குப்பை குவியலுக்கு அருகில் கடை வைத்திருப்பவர்களிடம் விசாரித்தபோது, “பகலில் யாரும் இந்த ரோட்டில் வந்து குப்பை கொட்டுவது கிடையாது. தினமும் இரவில் வந்து கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்கள் எப்போதாவது வந்து சுத்தம் செய்துவிட்டுச் செல்வார்கள். மறுநாளே திரும்பவும் வந்து யாரோ கொட்டிவிட்டுப் போவார்கள். இது தொடர்கதையாகி விட்டது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசிக்கொண்டு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

இந்தச் சாலையையொட்டி மருத்துவமனை ஒன்றும் அமைந்திருக்கிறது. அதனால் மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே இந்தப் பகுதியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். மக்களும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் இந்தக் குப்பைக் குவியல்களை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்து, மீண்டும் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.