27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

"தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?" – கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ்

Date:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் ‘கடையடைப்பு’ போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷிடம் துறை சார்ந்த நமது கேள்விகளை முன்வைத்தோம்…

“‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ என விமர்சித்த த.வெ.க., ஆட்சிக்கு வந்தபிறகுதான், ‘காலி பாட்டிலைத் திரும்பப் பெறுவதற்காகத்தான் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கப்படுகிறது’ என்ற உண்மையையே கண்டுபிடித்ததா?”

“இல்லையில்லை… காலி பாட்டிலைத் திரும்பப் பெறுவதற்கான வைப்புத்தொகையாக 10 ரூபாய் வசூலிப்பதை நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அதையும்தாண்டி கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதைத்தான் கேள்வி கேட்கிறோம்.”

“‘நிர்வாக செலவுகளைச் சமாளிக்கத்தான் கூடுதல் 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது’ என டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினரும் எதிர்க்கட்சியினரும் சொல்கிறார்களே?”

“அப்படியென்றால், ஊழியர்களுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன என்பது கடந்த ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருக்கிறதுதானே… இதையெல்லாம் தீர்ப்பதற்கான முயற்சிகளை அவர்கள் எடுத்திருக்க வேண்டாமா? ‘பிரச்னைகள் இருப்பதால், பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயை வாங்கிக்கொள்’ என்று சொல்பவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்களா? ‘லஞ்சம் வாங்கிக்கொள்’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவரும் லஞ்சம் வாங்குபவராகத்தானே இருப்பார்!

டாஸ்மாக்

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஜனநாயக ரீதியிலாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான பிரச்னைகளைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கிறோம். தடாலடியாக சட்டம் போட்டு, ‘இப்படித்தான் நீங்கள் மாறியாக வேண்டும்’ என்று சர்வாதிகாரமாக எதையும் செய்யவில்லை. அதனால்தான், இப்போது 10 ரூபாயிலிருந்து 5 ரூபாய், 2 ரூபாய் எனக் குறைத்து வாங்குவதாக செய்திகள் வருகின்றன.

குறிப்பாக கோயம்புத்தூர் பகுதிகளில் கூடுதல் விலை என எந்தத் தொகையுமே வாங்குவதில்லை என்ற செய்திகள் கிடைத்திருக்கின்றன. இதுநாள்வரை நடைபெற்றுவந்த மோசடிகளிலிருந்து இதுவே மிகப்பெரிய மாற்றம்தான். வரும் நாட்களில், முற்றிலுமாக மோசடி, முறைகேடுகளை ஒழித்துக்கட்டி ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டுவந்தே தீருவோம்!”

“மது விற்பனை இலக்கினால் மன அழுத்தத்துக்கு உள்ளாவதாக டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் குறிப்பிடுகின்றனவே?”

“கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சில குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் மது வகைகளை மட்டுமே விற்கச்சொல்லி டாஸ்மாக் துறையில் ஆதிக்கம் செலுத்திவந்தன. த.வெ.க ஆட்சிக்குப் பிறகு, இந்த நிலை மாறியிருக்கிறது. எந்தவித பாகுபாடுமன்றி அனைத்து நிறுவனங்களின் மது வகைகளையும் விற்கச் சொல்லி வருகிறோம்.

நுகர்வோரே தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளட்டும் என்று நடைமுறையை மாற்றியிருக்கிறோம். எனவே, யாருக்கும் எந்த மன அழுத்தமும் இல்லை. இதைத்தாண்டியும் பிரச்னைகள் இருந்தால், நடைபெறவிருக்கிற பேச்சுவார்த்தையில் அதுகுறித்தும் பேசி, பிரச்னையைக் களைவதற்கான முடிவுகள் எடுக்கப்படும்”

“அண்மையில், டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் சில நிறுவன மதுபான வகைகளுக்கு மத்திய உணவு தர நிர்ணய கமிஷன் விதித்திருந்த தடையுத்தரவு உடனடியாக விலக்கப்பட்டுவிட்டதே என்ன காரணம்?”

“குறிப்பிட்ட நிறுவன மதுபான வகைகளின் லேபிள்களில் உள்ள வாசகம் குறித்து மத்திய உணவு தர நிர்ணய கமிஷன் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) விளக்கம் கேட்டு, தடை விதித்திருந்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளித்த விளக்கத்துக்குப் பிறகு தடையுத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. நாங்களும் உடனே நிறுத்தி வைத்திருந்த விற்பனை உத்தரவை ரத்து செய்துவிட்டோம்.

இதுவே கடந்த காலமாக இருந்திருந்தால், ‘தடையுத்தரவு வந்திருக்கிறதா… கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்’ என வேறு முயற்சிகளுக்காகக் காத்திருந்திருப்பார்கள். ஆனால், நாங்களோ தடையை அமல்படுத்தவும், நீக்கவுமான நடவடிக்கைகளைச் சட்டப்படி உடனே எடுத்திருக்கிறோம்.மற்றபடி இதன் பின்னணியில் வேறு எந்த மர்மமும் இல்லை”

அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்

“இவ்விவகாரத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கொள்முதல் பரிசோதனை, அபராதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பபடுகின்றனவே?”

“மனிதர்கள் உட்கொள்ளக்கூடிய அளவில்தான் ஆல்கஹால் அளவு சேர்க்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட கலவை சம்பந்தமான சோதனை டாஸ்மாக் லேப்-பில் செய்யப்படும். அந்த ரிப்போர்ட்களையும் நான் செக் செய்துவிட்டேன். அதில் எந்தத் தவறும் இல்லை. அடுத்ததாக, அபராதத்தைப் பொருத்தளவில் 50 கோடி ரூபாய்க்கு உட்பட்ட உணவு வணிகத்தின் செயல்பாடுகள் மட்டும்தான் மாநில அரசின் உணவுத்துறை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

50 கோடிக்கு மேற்பட்ட வணிகத்துக்கான லைசென்ஸில் ஆரம்பித்து அபராதம் வரையிலாக அனைத்துவகை நடவடிக்கைகளும் மத்திய அரசின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே இவ்விவகாரத்தில் மாநில அரசின் சார்பில் அபராதம் விதிக்க வேண்டிய தேவையே எழவில்லை. ஆனால், வேண்டுமென்றே சிலர் இவ்விவகாரத்தை மாநில அரசின் நடவடிக்கையோடு முடிச்சுப்போட்டு கேள்விகளை எழுப்பி, மடைமாற்றம் செய்கின்றனர்”

“டாஸ்மாக் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தவிரும்பும் தனியார் சக்திகள், ஆளுங்கட்சித் தரப்பில் தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாக செய்திகள் வெளியாகின்றனவே?”

“அதெல்லாமே கிளப்பிவிடப்படுகிற வதந்திகள்தான். மக்கள் பணத்தைத் திருடியவர்கள் என்னைப் பற்றி அவதூறு பரப்பினாலும், பயமுறுத்த நினைத்தாலும் எதற்கும் நான் கவலைப்பட மாட்டேன்.

தேர்தல் வெற்றிக்காகப் பல கோடிகளைக் கொட்டியவர்கள்தான், போட்ட பணத்தை எடுப்பதற்காக தில்லுமுல்லு வேலைகளைச் செய்யவேண்டும். நானெல்லாம் சில லட்சங்களைக் கூட செலவு செய்யாமலேயே, எங்கள் தலைவர் மீதான மக்களின் நம்பிக்கையினால் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அந்த மக்களின் நம்பிக்கையைக் காக்கும்பொருட்டு துறையின் அமைச்சராக நான் இருக்கின்ற வரையில், தவறு செய்தவர்கள் அனைவரும் பயந்து பயந்தேதான் வாழவேண்டும்.

விஜய்
விஜய்

கடந்த ஆட்சியாளர்களைப்போலவே நாமும் இருந்துவிடலாம் என நாங்கள் நினைத்திருந்தால், இங்கே எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது. துறை ரீதியான நிறைய விஷயங்களில் எல்லோருடனும் கலந்தாலோசித்தே, நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறோம்.

‘தனியார்மயப்படுத்த வேண்டுமா, தனியார்மயமானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், மக்கள் என்ன நினைக்கிறார்கள்’ இப்படி அனைத்துக் கோணங்களிலும் ஆலோசித்தே முடிவுகளை எடுக்கிறோம்.”

“வருங்கால பிரதமர் விஜய் என்ற பிரசாரத்தை த.வெ.க அமைச்சர்களே முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனரே?”

“இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். அதாவது, நாங்கள் த.வெ.க-வை மட்டும் குறிப்பிடவில்லை. ‘தென் மாநிலங்கள் அல்லது தமிழ்நாட்டிலிருந்து ஏன் ஒரு பிரதமர் உருவாகக்கூடாது’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதை ஏன் ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கிறீர்கள்?”

“காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள ‘இந்தியாக் கூட்டணி’யில் இருந்துகொண்டு த.வெ.க தரப்பிலிருந்து இப்படியொரு கருத்துருவாக்கம் செய்யப்படுவது கேள்விக்குள்ளாகும்தானே?”

“யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாகத்தான் பேசக்கூடாது. எங்கள் கட்சியிலிருந்து பிரதமர் வேட்பாளர் என்று நாங்கள் சொல்லவில்லை. ‘தென்மாநிலங்கள் அல்லது தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும்’ என்று நாங்கள் நினைக்கவோ பேசவோ கூடாதா என்ன?”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அவையில் சட்டமன்ற...

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?' விஜய் – மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார்

சூடுபிடிக்கும் மதுரை அரசியல்!கோ.தளபதி எக்ஸிட்... பி.டி.ஆர் என்டரி..?சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு...

"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" – கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்

சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர்...

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானின் உச்சத் தலைவர்...