கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் உள்ள இந்த மலை கோயிலுக்கு 8 கி.மீ தொலைவு, ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும்.
அந்த வகையில் நடப்பாண்டில் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் மலையேறி வருகிறார்கள்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை கோயிலுக்குச் செல்லும் வழியில் மரத்தின் மீது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை சிலர் பறக்க விட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் தவெக கொடியை அகற்றினார்கள்.

மலைக் கோயிலில் தவெக கட்சி கொடியை பறக்க விட்ட நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தமிழக வெற்றி கழக கொடி ஏற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்தில் வனத்துறையினர் பக்தர்களிடம் சோதனை நடத்துவார்கள்.

அதன் பிறகு தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். தற்போது இந்த சம்பவத்தால் வனத்துறையினர் பக்தர்களின் உடைமகளை இன்னும் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.