கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே த.வெ.க-வின் வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ், மகாராஜனின் ஷோரூமில் இருந்து பணம் கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது, மகாராஜனுக்கு கட்சியில் இளைஞரணி பொறுப்பாளர் பதவி வழங்குவதாகக் கூறி, அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிரகாஷ் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், பணம் பெற்றுக்கொண்ட பிறகும் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால், தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு மகாராஜன் கேட்டுள்ளார். இதற்கு பிரகாஷ் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் பதிவுப் பணிகளுக்காக அந்த வாகனத்தை மகாராஜனின் ஷோரூமில் பிரகாஷ் ஒப்படைத்துள்ளார். அப்போது, பதவி கொடுப்பதாக ஏற்கெனவே பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்க முடியும் என மகாராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 14ம் தேதியன்று பிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் ஷோரூமிற்கு வந்துள்ளனர். அப்போது மகாராஜன் அங்கு இல்லாத நிலையில், அவரது மனைவி திவ்யா மட்டும் இருந்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷ் ஷோரூமில் இருந்த இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு அநாகரிகமான முறையில் ரகளையில் ஈடுபடவே, இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, பிரகாஷை ஷோரூமில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினார்.
மேலும், ’த.வெ.க நிர்வாகி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?’ என்றும், கட்சிப் பதவி வழங்குவதாகக் கூறி லஞ்சம் பெற்றது குறித்தும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அங்கிருந்து பிரகாஷ் வெளியேற மறுத்த நிலையில், அங்கு நடைபெற்ற வாக்குவாதத்தை திவ்யா தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், பிரகாஷ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக த.வெ.க கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.




