27
November, 2026

A News 365Times Venture

27
Friday
November, 2026

A News 365Times Venture

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்: "கர்நாடகாவின் சதித் திட்டங்களை முறியடியுங்கள்" – அன்புமணி

Date:

“தமிழக நலன்களுக்கு எதிராக கர்நாடக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய வழக்குத் தொடர்ந்துள்ளது. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசுக்குச் சட்டப்பூர்வமாக அனைத்து உரிமைகளும் இருக்கும் நிலையில், மேகதாது அணை விவகாரத்தைத் திசை திருப்பும் நோக்குடன் இந்த வழக்கை கர்நாடக அரசு தொடர்ந்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021-ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி அப்போதே கர்நாடக அரசு முதன்மை வழக்கைத் தொடர்ந்தது. இந்தத் திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு 2021-ஆம் ஆண்டில் கோரியிருந்த நிலையில், அதைக் காரணமாகக் காட்டித் தான் கர்நாடக அரசு தடை கோரியது. ஆனால், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தேசியத் திட்டத் தகுதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து விட்ட நிலையில், திட்டப் பணிகளுக்கு இடைக்காலத் தடை கோரிய கர்நாடக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

அதன்பின் இச்சிக்கலில் எந்த முன்னேற்றமும் நிகழாத நிலையில், மீண்டும் ஒரு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்திருப்பது தமிழக நலன்களுக்கு எதிரான அதன் மனநிலையையே காட்டுகிறது.

எல்லீஸ் பாலம், காவிரி ஆறு, அணை மற்றும் முழு பருந்துப்பார்வை

வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள தடுப்பணையில் தடுத்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பது தான் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும்.

முதல் கட்டமாக 118.45 கி.மீ, இரண்டாம் கட்டமாக 109 கி.மீ, மூன்றாம் கட்டமாக 34 கி.மீ என மொத்தம் 262 கி.மீ தொலைவுக்குப் புதிய பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டால், சுமார் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும். ஒட்டுமொத்தமாக ரூ.14,400 கோடி தேவைப்படும் இத்திட்டத்திற்கு ரூ.364 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு, 3% பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இதைக்கூட பொறுக்க முடியாமல்தான் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

கர்நாடக அரசின் நோக்கம்

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அதே நேரத்தில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரியில் கிடைக்கும் உபரி நீரைக் கொண்டு தான் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டிற்கு காவிரி உபரி நீரை அதன் விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான வழக்கிலேயே இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறியிருக்கிறது. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் தேசியத் திட்டமாக அறிவிக்கப்படுவதற்குத்தான் மத்திய அரசின் அனுமதி தேவை. காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்தின் கடைசி கட்டமாக இது சேர்க்கப்படும் போது தான் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் தேசியத் திட்டமாக மாறும்.

மாறாக, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்தி வருவதால் அது தமிழக அரசின் சொந்தத் திட்டம்; அதற்கும் தாங்கள் செயல்படுத்தவுள்ள காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதை மதுரை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு இத்திட்டத்திற்கு நிலம் எடுக்க தடை விதிக்க முடியாது என 09.10.2026-இல் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்திருப்பதன் நோக்கம் மேகதாது அணை வழக்கை திசை திருப்புவதுதான். கர்நாடகம் தொடர்ந்துள்ள புதிய வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்று தமிழக அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டால், அதையே காரணம் காட்டி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ள நீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை கர்நாடகத்திற்கு உண்டு என உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பான வழக்கில் வாதிடுவதுதான் கர்நாடக அரசின் நோக்கம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காவிரியின் கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாட்டில் உபரி நீரைப் பயன்படுத்தி காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதால், கூடுதலாகப் பல மாவட்டங்கள் பயனடையுமே தவிர, யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. அதுமட்டுமின்றி, உபரி நீர் இருந்தால் மட்டும்தான் இத்திட்டத்திற்காக 6.3 டி.எம்.சி நீர் வழங்கப்படும்.

ஆனால், முதல்மடை பாசனப் பகுதியாக கர்நாடகத்தில் சுமார் 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால், அதையும் சேர்த்து கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 185 டி.எம்.சியாக அதிகரிக்கும். அனைத்து அணைகளும் நிரம்பிய பிறகு உபரி நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும். கடந்த காலங்களில் இதுதான் நடந்துள்ளது.

எனவே, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதையும், தமிழகத்தில் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில் கர்நாடகத்தின் அனைத்து சதித் திட்டங்களையும் முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் ஒரு கட்டமாக காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு தேவையான ரூ. 6941 கோடியை தமிழக அரசு ஒரே கட்டமாக ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Dating App வலையில் சிக்கிய டாக்டர்; விடுதியில் கட்டிப்போட்டு நகை, பணம் பறிப்பு; பகீர் பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியின் நுழைவுப் பகுதி அருகே உள்ள ஒரு...

"சதாம் ஹுசைனால் பாதிக்கப்பட்ட ஈரான் 'இந்த' விஷயத்தில்…" – இஸ்ரேலைச் சாடும் ஈரான்

"ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. ஆனால், அதை முழுதாக உருவாக்க...

மகள் திருமணத்தில் நடனமாடிய தந்தைக்கு நேர்ந்த சோகம்; திருமணம் முடிந்த பிறகு நடந்த இறுதிச்சடங்கு

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் உள்ள புதார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்...