11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

எம்ஜிஆர், ஜெயலலிதா சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா? | ‘வாவ்’ வியூகம் 09

Date:

திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தது போல், அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரும், அதன் பின்னர் வழிநடத்திய ஜெயலலிதாவும் எப்படி தாய்க்குலங்களின் அன்பையும், ஆசியையும் பெற்றார் என்பதையும் இன்றைய பகுதியில் பார்ப்போம்.

எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்னமே திரைப்படங்கள் வாயிலாக மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார். தாய்க்கு தலைவணங்கும் மகனாக, தங்கைக்காக வாழும் தமையனாக, சமுதாயத் தலைவனாக மக்களை சென்றடைந்திருந்தார். அதனால் அவர் அரசியலுக்கு வந்தபோது மக்களுக்கு ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று பாடி வைத்திருந்தது மெய்ப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போரட்டம் போன்ற மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும், திமுகவில் ஏற்கெனவே இருந்தவர் என்பதாலும், திரையின் உச்ச நட்சத்திரம் என்பதாலும் அவர் ஆரம்பித்த அதிமுக, மக்களிடம் அதிகப் போராட்டங்கள் இல்லாமலே சென்றடைந்தது.

கருணாநிதி, எம்ஜிஆர்

எம்ஜிஆர் ஒரு மகனாக, ஓர் அண்ணணாக, தலைவனாக தங்களைப் பாதுகாப்பார் என்று தாய்க்குலங்கள் நம்பி வாக்களிக்க ஆரம்பித்தனர்.

மேலும், அந்த காலக்கட்டம் குடும்பத் தலைவர்களும், ஆண்களுமே அந்தக் குடும்பத்தின், வீட்டில் உள்ள பெண்களின் அரசியல் சார்பை தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனாலும் திமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்தபோது அவர் பக்கம் சென்ற கணிசமான தொண்டர்களின் குடும்பப் பெண்களும் எம்ஜிஆர் வாக்கு வங்கியாகினர்.

எம்ஜிஆர் தனது ஆட்சிக் காலத்தில் ரேஷன் அரிசி விநியோகத்தில் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்தது, அதை சார்ந்திருந்த தாய்மார்கள் மத்தியில் அவருக்கான அபிமானம் குறையாமல் வைத்திருந்தது. அதுதவிர ஏழைக் குடும்பப் பெண்களுக்கு இலவச சேலைகள், திருமாங்கல்யத் திட்டம் ஆகியவையும் மதிய உணவுத் திட்ட விரிவாக்கமும், பெண்களின் அன்றாடச் சுமையைக் குறைத்தன.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், விதவை ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

எம்ஜிஆர் திரையில் இருந்ததைப் போல் நிஜத்திலும் தங்களைக் காப்பதாகவே மக்கள் நம்பினர். 1962 சீனப் போரின்போது நேரு போர் நிதி கோரியவுடன் பெருந்தொகையை அள்ளிக் கொடுத்து மக்கள் அபிமானம் பெற்ற எம்ஜிஆர்தான் பின்னாளில் தான் ஆட்சியில் அமர்ந்தபோது எப்போதெல்லாம் மழை, வெள்ளத்தில் ரிக்‌ஷாக்காரர்கள் ரிக்‌ஷாக்களை இழந்தாலும் வாரி வாரி அதை சரிசெய்யவும், புதியவை வாங்கவும் நிதி கொடுத்தார். இப்படியான செயல்கள் தான் அவருக்கான மகளிர் வாக்கை வலுவான வாக்கு வங்கியாக வைத்தது.

அதுமட்டுமல்லாம் கட்சியில் அவர் ஜெயலலிதாவுக்கு அளித்த பொறுப்பு மிக முக்கியமான அரசியல் நகர்வு. ஜெயலலிதாவின் திரை பிம்பம், ஆளுமையை சரியாக தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார் எம்ஜிஆர். ஜெயலலிதாவை தனது மதிய உணவுத் திட்டத்தின் தூதராக அறிவித்ததாக இருக்கட்டும், அவரை ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்ததாக இருக்கட்டும், தமிழக மகளிர் மத்தியில் எம்ஜிஆர் மீதான அபிமானத்துக்கு மேலும் வலுசேர்த்ததோடு, ஜெயலலிதாவின் தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாகியது.

ஜெயலலிதா

20-06-1982-ல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பிலான மகளிரணி மாநாட்டில் ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்ற தலைப்பில் தனது முதல் அறிமுக அரசியல் உரையாற்றிய ஜெயலலிதா, அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்த கதை இன்னொரு தனி அத்தியாயத்துக்கான கன்டென்ட். ஆனால், ஜெயலலிதாவின் இருப்பு, எம்ஜிஆருக்கு பெண்கள் மீதான அபிமானம் இம்மியும் குறையாமல் அவர் காலம் முழுவதும் பார்த்துக் கொண்டது எனலாம்.

அதனாலேயே எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக பெண்கள் மனங்களில் ஒட்டிக் கொண்டார் ஜெயலலிதா. அதுவும் எம்ஜிஆர் மறைவின்போது வேனில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம், சட்டப்பேரவையில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்கள் யாவும் ஆண்டாண்டு காலமாக தமிழக முதல்வராக ஆண் தானே இருக்கிறார், ஏன் ஒரு பெண் அந்தப் பதவிக்கு வரக்கூடாது என்ற அவருக்கு மகளிர் ஆதரவை அலையென உருவெடுக்க வைத்தது.

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில், திருமண நிதியுதவித் திட்டம் (தாலிக்கு தங்கம்) மூலம் ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மூலம் உழைக்கும் பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் (அதிகபட்சம் ரூ.25,000) வழங்கப்பட்டது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுக்காக நிதியுதவியை உயர்த்தி வழங்கினார். தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கவும், கைவிடப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் வழிவகுக்கப்பட்டது. அம்மா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டங்கள் இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்கச் செய்தன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் உதவிகள் வழங்குதல் மற்றும் பெண்களுக்கு 9 மாத மகப்பேறு விடுமுறை அளித்தல் முதலானவையும் பெண்களுக்கு பயன் அளித்து மக்கள் மனதில் அபிமானத்தைக் கூட்டின.

இவை தவிர வீர தீரச் செயல்களுக்கு கல்பனா சாவ்லா விருது மற்றும் சமூக சேவை புரிந்த பெண்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டன.

நலத் திட்டங்களையும் கடந்து அவர் பெண்களுடன் தனக்கென ஒரு தனி பிணைப்பை உருவாக்கினார். கிராமப்புற பெண்கள் பலரும் அவரை, ‘சிங்கப் பெண்’ணாகவே பார்த்தனர். அதை அப்படியே கேப்பிட்டலைஸ் செய்த ஜெயலலிதா ‘அம்மா ’ என்றொரு கல்ட் உருவாக்கினார். அவரது கட்சியினர் மட்டுமல்ல தமிழக மக்களுமே மெல்ல மெல்ல ஜெயலலிதாவை அம்மாவென்று விளிக்கலாயினர். தமிழக அரசியல் முதல் டெல்லி அரசியல் வரை அம்மா என்ற பெயர் அவருக்கு நிலைத்துப்போகும் அளவுக்கு அவரும் வளர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘உங்களால் தான் நான்… உங்களுக்காகவே நான்’ என்று உரக்கச் சொல்லி பெண்கள் அத்தனை பேரின் அன்பையும், பேராதரவையும் தன் பக்கம் குவித்து வைத்திருந்தார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நடந்த உட்கட்சிக் குழப்பங்கள் எண்ணிலடங்காதவை. ஜெயலலிதா அதிமுகவுக்கு சேர்த்து வைத்த சொத்து பெண் வாக்காளர்கள். அது எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட நாள் முதல் அவர் அதிமுகவுக்காக தொடர்ச்சியாக சேர்த்து வைத்தது. ஜெயலலிதாவின் மறைவோடு இயல்பாக அந்த பெண் வாக்காளர்களில் ஒரு பகுதி கணிசமாகக் குறைந்தது எனலாம். அவ்வாறாக அவர்கள் அதிமுகவை கைவிடக் காரணம் கட்சியின் உட்பூசல்.

அதையும் தாண்டி இபிஎஸ் தலைமையை ஏற்று ஒரு பெருமளவிலான பெண்கள் கூட்டம் அதிமுக பக்கம், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் பக்கம் நிற்கத்தான் செய்தது. ஆனால், கட்சியின் மீதான கட்டுப்பாட்டை யார் தக்கவைத்துக் கொள்வது என்பதில் காட்டிய அக்கறையால் பெண் வாக்கு வங்கியில் ஒரு சிறிய அளவிலான அடி வாங்கினார் இபிஎஸ்.

அடுத்து வந்த தேர்தலில் உட்கட்சி பூசல், பாஜகவுடன் கூட்டணி, ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது. இருந்தாலும் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றது. அந்த இடத்தைத் தந்தது பெண் வாக்காளர்களின் பங்களிப்பு இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

சேலத்திலும், கொங்கு மண்டலத்திலும் இன்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பெண் வாக்காளர்களின் மவுசு இருக்கத்தான் செய்கிறது. காரணம் அவருடைய அத்தனை வாக்குறுத்திகளும் அம்மா, அம்மா என்று ஜெயலலிதாவை மறவாமல் முன்னிறுத்தியே இருக்கிறது. எம்ஜிஆருக்காக ஜெயலலிதாவை ஆதரித்தது போல் ஜெயலலிதாவுக்காக எடப்பாடியை ஆதரிக்கும் போக்கு அதிமுகவில் இன்னும் முடிந்துவிடவில்லை.

இந்தத் தேர்தலுக்கான வாக்குறுதிகளாக இதுவரை 3 கட்டங்களாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வாக்குறுதிள் பெண்களை வெகுவாகக் கவர்வதாகவே உள்ளது. பெண் வாக்காளர்களைப் பொறுத்துவரை திமுக vs அதிமுக தான் இன்னமும் கள நிலவரம். இதில், இந்தத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் நம்பிக்கையை தன் பக்கம் குவிக்க இபிஎஸ் எடுக்கும் முயற்சிகளின் பலனும் தேர்தல் முடிவில்தான் தெரியும். குறிப்பாக மகளிர் பாதுகாப்பை முன்வைத்து இபிஎஸ் செய்யும் பிரச்சாரத்தின் பலனை எந்தளவுக்கு அறுவடை செய்கிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!

(தொடரும் )

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருக்கும் மகன்; `கருணை கொலை' கோரிய பெற்றோர் – நீதிமன்றம் அனுமதி!

2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர்...

இனி 'இந்த' நிலம், வீடு பத்திரப் பதிவுகளுக்கு பான் கார்டு தேவையில்லை!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம்...

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' – அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று...

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' – உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய...