காங்கிரஸ் எம்.பி சசி தரூர் (Sasi Tharoor), ட்ரம்ப் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளார். முன்னதாக ட்ரம்ப் மோடி பேச்சுவார்த்தை நடத்துவதில் தன்னை விட சிறந்தவர் எனப் பேசியிருந்தார்.
இதுகுறித்து சசி தரூர், “ட்ரம்ப் போன்ற ஒருவர் மோடி தன்னை விட நன்றாக பேச்சுவார்த்தை நடத்துபவர் எனக் கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இதை மோடி அவரது கணக்கில் வைத்துக்கொள்ளலாம்” எனப் பேசியிருந்தார்.
மேலும், சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை சங்கிலிகள் போட்டு வெளியனுப்புவது குறித்து மோடி திரைமறைவில் பேசியிருக்கலாம் என்றும் சசி தரூர் கூறியிருக்கிறார். மோடி – ட்ரம்ப் சந்திப்பு ஊக்கமளிப்பதாக உள்ளதாகவும், பெரிய பிரச்னைகள் பேசப்பட்டுள்ளதாகவும் சசி தரூர் பேசியுள்ளார்.
சசி தரூர் மோடியை பாராட்டி பேசியது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் தனது கருத்துகள் குறித்து விளக்கமளித்த சசி தரூர், “எதிர்க்கட்சி என்றாலே மத்திய அரசு எது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. கட்சிக்காக மட்டும் எப்போதும் பேச முடியாது. பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் சந்திப்பை நான் பாராட்டியது சரிதான். இந்திய நலன் கருதிதான் பாராட்டினேன்.
அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவரை சந்திக்கும் 4-வது தலைவர் பிரதமர் மோடி. இது உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகிறது. அதேநேரம், மோடியின் அமெரிக்க பயணத்தில் சில கேள்விகளும் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதுகுறித்து அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி பேசினாரா என்பது தெரியவில்லை.
எனினும், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம், வரி உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்த 9 மாதங்களுக்கு பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய ஏற்றுமதியை பாதிக்கும் வகையில் அமெரிக்கா தன்னிச்சையாக வரிகளை உயர்த்தி அறிவிப்பதை விட, இந்த கால அவகாசம் எவ்வளவோ மேல்.

என்னை பொருத்தவரை, பிரதமரின் அமெரிக்க பயணத்தால் சில விஷயங்களில் இந்தியாவுக்கு வெற்றியே கிடைத்துள்ளது. ஒரு இந்தியனாக அதை பாராட்டுகிறேன்.
எப்போதும் கட்சிக்காகவே பேச முடியாது. நான் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இல்லை. மத்திய அரசு செய்வது எல்லாமே தவறானது என்று எதிர்க்கட்சிகள் நினைப்பதும், எதிர்க்கட்சிகள் செய்வது எல்லாம் தவறு என்று மத்திய அரசு நினைப்பதும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஜனநாயகத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போக வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.
இதேப்போல கேரளாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் தொழில்துறை வளர்ந்துள்ளதாக சசி தரூர்தரூர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் Changing Kerala: Lumbering Jumbo to a Lithe Tiger என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
அந்த கட்டுரைக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, “இது கேரளாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறித்து எழுதப்பட்டது அல்ல, ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் தொழில்துறையில் ஏற்பட்ட மாற்றங்களையேப் பேசுகிறது… விமர்சிக்கும் முன் கட்டுரையை படியுங்கள், இதில் எந்த கட்சி பக்கசார்பும் இல்லை. நான் கடந்த 16 ஆண்டுகளாக கேரளாவின் பொருளாதார சவால்கள் குறித்து எழுதி வருகிறேன்.” எனத் தெரிவித்தார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play