ரஷ்யா, சீனா, வடகொரியா நட்பு நாடுகள் என்பது உலகமே அறிந்தது.
இதில் ஒரு நாட்டிற்குப் பிரச்னை என்றால், மற்ற இரு நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் களத்தில் இறங்கி உதவும்.
அப்படித்தான் ரஷ்யப் போரிலும் சீனாவும், வடகொரியாவும் ரஷ்யாவிற்குத் தொடர்ந்து மறைமுகமாக உதவி வருகின்றன.
இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிற்கு வடகொரியா ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
ஜெலன்ஸ்கி பேச்சு
கடந்த வாரம், நேர்காணல் ஒன்றில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது…
“வடகொரியா 30,000 முதல் 50,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது.
அந்த வீரர்களுக்கு ரஷ்யா டிஜிட்டல் சிமுலேட்டர்கள் மூலமல்லாமல், ரஷ்யா-உக்ரைன் போர்க் களத்தில் உண்மையான போர்ப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.
இதில் வடகொரியாவிற்கு எந்தச் செலவும் இல்லை.
வடகொரியாவிற்கும் கிடைத்திருக்கும் இந்தப் பயிற்சி பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
உக்ரைன் போரில் ரஷ்யா ஏவிய ஏவுகணைகளில் வடகொரியா தயாரித்த ஏவுகணைகளைப் பார்த்தேன். ஆனால், சீன ஏவுகணைகள் எதையும் நான் பார்க்கவில்லை.
ஆனால், அதற்குப் பதிலாக, சீனத் தொழில்நுட்பங்கள் ரஷ்யாவிற்குச் செல்கின்றன.
ரஷ்யா பயன்படுத்தும் இயந்திரங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து வருகின்றன. அநேகமாக அந்த இயந்திரங்களுடன் நிபுணர்களும் தொழில்நுட்பங்களும் கூட வந்திருக்கக்கூடும்” என்று பேசியிருந்தார்.
ரஷ்யாவில் வடகொரிய பெண்கள்
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, ரஷ்யாவில் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ராணுவத்தில் இணைய திருப்பிவிடப்பட்டிருக்கின்றனர்.

இதனால், ரஷ்யத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்க ஆட்கள் இல்லை. இதனால், வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு மக்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் பெண்களே அதிகம்.
வடகொரியாவின் இந்த உதவி மூலம் ரஷ்யாவிற்கு ராணுவத்திற்கும், தொழிற்சாலைக்கும் ஆள் கிடைக்கிறது என்று பார்த்தாலும், இதில் வடகொரியாவும் பெரிய அளவில் பலனடைகிறது.
அதாவது, பொருளாதார ரீதியாக, வடகொரியா மக்கள் ரஷ்யாவில் வேலை செய்யும்போது, அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது.
சுற்றிலும் வடகொரியாவுக்குத் தடைகள் இருந்தாலும், ரஷ்யா வழியே வடகொரியாவிற்கு பணம் செல்கிறது.
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.
ஒன்று, ரஷ்யாவிற்கு ராணுவம், தொழில்நுட்பம், தொழிற்சாலை என அனைத்திலும் வெளியிலிருந்து உதவி கிடைக்கும்போது, ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு ‘எண்ட்’ இல்லாமல் தொடர்ந்துகொண்டே போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னொன்று, வடகொரியா ராணுவப் பயிற்சி பெறுவது மூலமும், பொருளாதார ரீதியாக ஓரளவு வலுப்பெறலாம்.




