நார்வே நாட்டை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ஹெல் லிங், இந்தியா வருவதற்கான விசா ரத்து செய்யப்பட்டிருக்கும் சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
பத்திரிகையாளர் ஹெல் லிங் இந்தியா வருவதற்கான காரணம்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹைதராபாத்தில் நவம்பர் 13,14 ஆகிய நாள்களில் பாரத் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று எதிர்கால ஊடகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து உரையாற்ற இருந்தார் நார்வே நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹெல் லிங். ஆனால் இவர் இந்தியா வருவதற்கான விசா உள்துறை அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் ஹெல் லிங் விசா ரத்து செய்யப்பட காரணம் என்ன?
கடந்த 2026 மே மாதம், நார்வே நாட்டின் ஒஸ்லோவில் நடந்த இந்தியா மற்றும் நார்வே இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் ஆகியோர் ஊடங்களுக்கு அறிக்கை அளித்த பிறகு, ஹெல் லிங் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்றிருந்தார். இதன் காரணமாகவே ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஹெல் லிங் தனது எக்ஸ் பதிவில்,
நார்வேயில் உள்ள இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்ட தனது விசா ரத்து செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விமான நிலையத்திற்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது விசா ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு செல்ல அமித் ஷா தன்னை அனுமதிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கண்டனம்
ஹெல் லிங் விசா ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி நார்வே நாட்டிற்கு சென்றிருந்த போது ஹெல் லிங் அவரிடம் கேள்வி கேட்க முயன்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, அரசு ஏன் கேள்விகளை கண்டு அஞ்சுகிறது ? என கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியை கேள்வி கேட்டது மட்டுமே ஹெல் லிங் செய்த குற்றமாக தெரிகிறது!
இது தொடர்பாக இந்திய பதிப்பாளர்கள் சங்கம் ( Editors Guild of India ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியை கேள்வி கேட்டது மட்டுமே ஹெல் லிங் செய்த குற்றமாக தெரிகிறது. மேலும், கடைசி நேரத்தில் ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்ட காரணம் குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரத்துவத்தின் அத்துமீறலை காட்டுவதோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற பிம்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பேச்சு சுதந்திரம் என்பது, எல்லா ஜனநாயக நாடுகளும் கடைபிடிக்கும் கொள்கைகளில் ஒன்றாகும். இது அரசியலமைப்பு சட்டம் 19 (a)(1) -ன் படி அடிப்படை உரிமையாகும். ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




