‘காலியாகும் எம்.பி சீட்
கட்சிகளுக்குள் யுத்தம்!’
கடந்த 25.7.2019 அன்று தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தற்போது பதவியில் உள்ளனர். இதேபோல் அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அ.தி.மு.க-வின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வாகினர். இவர்களின் பதவிக்காலம் வரும் 24.7.2025 அன்றுடன் நிறைவடைகிறது. அதற்குள் அந்த பதவியைப் பிடிக்க தி.மு.க, அ.தி.மு.க-வில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அறிவாலய வட்டாரங்கள், “தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை எம்.பி-யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. இதன்படி பார்த்தால் 134 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் தி.மு.க-வுக்கு நான்கு இடங்கள் கிடைக்கும். இதில், தி.மு.க-வில் மீண்டும் வில்சன், அப்துல்லாவுக்கு சீட் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். நாடாளுமன்ற விவாதங்களில் சட்டப்பூர்வமான வாதங்களை முன்வைத்து வருவதால் தலைமையின் குட் புக்கில் இருக்கிறார், வில்சன். இதேபோல் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக அறியப்படுவர், எம்.எம்.அப்துல்லா. தனது ஆதரவாளர்களை அனைத்து மட்டத்திலும் கொண்டுவர வேண்டும் என உதயநிதி தீவிரம் காட்டிவருகிறார். கூடவே சிறுபான்மையினர் என்பதாலும் அப்துல்லாவுக்குத்தான் மீண்டும் சீட் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
‘விடாத மதிமுக
முந்தும் கமல்!’
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு இம்முறை மீண்டும் சீட் கிடைப்பது கடினம்தான். ஏனெனில் இந்தமுறை கூட்டணி ஒப்பந்தத்தின்போதே, ‘ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை சீட் கொடுக்கப்படும்’ என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படிதான் திருச்சி தொகுதி துரை வைகோவுக்கு ஒடுக்கப்பட்டது. இதையடுத்து வைகோவிடம் இருக்கும் சீட்டை கமலஹாசனுக்கு கொடுக்க தி.மு.க தயாராகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சமீபத்தில் துணை முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. ஆனால் தனது சீட்டை விட்டுத்தர வைகோ தரப்பு தயாராக இல்லை.

சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ம.தி.மு.க பொருளாளர் செந்திலதிபன், “கூட்டணி பேச்சுவார்த்தையின் போது வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை சீட் தருவதாக தி.மு.க தெரிவித்தது. எனவே நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்’ என வெளிப்படையாகவே போட்டு உடைத்திருக்கிறார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளில் நேரடியாக அவரை சந்தித்தார், கமலஹாசன். அப்போது எம்.பி சீட் குறித்தும் பேசியதாக சொல்லப்படுகிறது. இதேபோல் தி.மு.க வசம் உள்ள மற்றொரு இடம் வழக்கமாக தொ.மு.ச-வுக்கு ஒதுக்கப்படும். அதன்படி இம்முறை தொ.மு.ச பொருளாளர் நடராஜனுக்கு வழங்க வாய்ப்புகள் அதிகம்” என்றனர்.
‘மோதும் முன்னாள் அமைச்சர்கள்
தகிக்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!’
தி.மு.க-வில் நிலைமை இப்படியிருக்க அ.தி.மு.க-வில் சொல்லவே தேவையில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய இலைக்கட்சி சீனியர்கள், “அ.தி.மு.க-வை பொறுத்தவரையில் சட்டமன்றத்தில் 66 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். இதில் நான்குபேர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஒரு சீட்டை மட்டுமே அ.தி.மு.க எளிதாக நிரப்பிக்கொள்ள முடியும். மற்றொரு சீட்டை நிரப்புவதற்கு ஓ.பி.எஸ், பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அவர்கள் அவ்வளவு எளிதில் ஆதரவு கொடுக்க மாட்டார்கள். அவர்களிடம் நிச்சயம் சில கண்டிஷன் இருக்கும்.
எளிதாக இருக்கும் ஒரு சீட்டை பிடிப்பதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

மற்றொரு சீட்டில் சிக்கல் இருப்பதால் முதலில் அந்த சீட்டை தே.மு.தி.க-வுக்கு வழங்க முடிவு செய்தது, எடப்பாடி தரப்பு. இதையடுத்து தே.மு.தி.க தரப்பிலிருந்து ஓ.பி.எஸ், பா.ஜ.க தரப்பிலும் உதவி கோரப்பட்டது. அந்த சீட்டை தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ் அல்லது விஜய பிரபாகரனுக்கு கொடுக்க பிரதேமலதா திட்டமும் வகித்திருந்தார். இதற்கிடையில்தான் அ.தி.மு.க உதவியுடன் அன்புமணியை எம்.பியாக்க காய் நகர்த்த தொடங்கியது, பாமக வட்டாரம்.
‘தயாராக இருக்கிறார் ஐயா
தூதுபோன ஜி.கே மணி!’
இதுதொடர்பாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார், பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே.மணி. அப்போது, ‘அன்புமணிக்கு எம்.பி சீட்டுக்கு உதவி செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு எடப்பாடி, ‘நாங்கள் ஏற்கெனவே தே.மு.தி.க-க்கு உத்தரவாதம் அளித்துள்ளோம்’ எனக் கையை விரித்திருக்கிறார். இதற்கு ஜி.கே.மணி, ‘நீங்கள் எம்.பி சீட் கொடுத்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு வருவதற்கு ஐயா தயாராக இருக்கிறார்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு ஆரம்பத்தில் எடப்பாடி தரப்பு பிடிகொடுக்கவில்லை. இவ்வாறு எம்.பி சீட்டுக்கு பா.ம.க முயற்சி செய்வதாகத் தகவல் வெளியானவுடனேயே, ‘ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை சீட் எங்களுக்குக் கொடுப்பதாக அ.தி.மு.க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. யார் வேட்பாளர் என்பதை விரைவில் அறிவிப்போம்” எனப் பேட்டி கொடுத்தார், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இந்தசூழலில் எடப்பாடி தரப்புக்கு தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், ‘பா.ம.கவிடம் 6 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்.
‘தே.மு.தி.க-வுக்கு சீட்டா?
கொதித்த எடப்பாடி!’
அவர்களை சேர்த்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 68 ஆகிவிடும். அப்போது இரண்டு மாநிலங்களவை இடங்களைப் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. இந்தவாய்ப்பை தவறவிட்டால் ஓ.பி.எஸ், பா.ஜ.க-விடம் நாம் சென்று ஆதரவு கேட்கும் நிலைமை தான் வரும். அதேநேரத்தில் தே.மு.தி.க-வுக்கும் அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லையென்றால் தேவையில்லாமல் ஒரு மாநிலங்களவை சீட்டை நாம் இழக்க நேரிடும்’ என எடப்பாடியிடம் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

இதையடுத்துதான் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, “தே.மு.தி.க-வுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று யார் சொன்னது.. எங்களது தேர்தல் உடன் படிக்கையை பார்த்தீர்களா.. யாராவது சொன்னார்கள் என்று கேட்காதீர்கள்” என கொதித்திருக்கிறார். இது பிரேமலதாவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. இதையடுத்து விஜகாந்த்தின் எக்ஸ் பக்கத்தில், “சத்தியமே வெல்லும் நாளை நமதே” என பதிவிடப்பட்டது. இதற்குள் சமூகவலைத்தளங்களில் தே.மு.தி.க நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பின்னர் விஜகாந்த்தின் எக்ஸ் பக்கத்திலிருந்து அந்த பதிவு நீக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் யாரும் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்யக்கூடாது என நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டது, தே.மு.தி.க தலைமை.
‘அப்செட் பிரேமலதா
பேசிய முக்கியப்புள்ளி!’
தே.மு.தி.க இவ்வாறு சைலன்ட் மோடுக்கு போனதற்கு பின்னால் எடப்பாடிக்கு நெருக்கமான ஒருவர் சுதீஷிடம் பேசியதுதான் காரணம். அந்த முக்கியப்புள்ளில், ‘அண்ணன் வருத்தப்பட வேண்டாம் என தெரிவித்தார். உங்களுக்கு செய்ய வேண்டியதை நிச்சயம் செய்வோம்’ என தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் எக்ஸ் பக்கத்திலிருந்து பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பிரேமலதா இன்னும் கோபத்தில்தான் இருக்கிறார். இதில் தைலாபுரம் தோட்டம் ஹாப்பி மோடில் இருக்கிறது. முன்னதாக கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசிய அன்புமணி, ‘பிற மாநிலத்திலிருந்து தன்னை எம்.பி-யாக தேர்வு செய்ய வேண்டும்’ எனச் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் பா.ஜ.க தலைமை பிடி கொடுக்கவில்லை. இதையடுத்துதான் அ.தி.மு.க-வின் கதவைத் தட்டிருக்கிறார்கள்.
அதில் முன்னேற்றம் தெரிவதுதான் இந்த சந்தோஷத்துக்கு காரணம். அதேநேரத்தில் எடப்பாடியின் இந்த முடிவுக்கு அந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கிடையில் நடிகையும் கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான விந்தியாவுக்கு சீட் கொடுக்க ஆலோசித்து வருகிறாராம் எடப்பாடி. இது எம்.பி சீட்டுக்கு தீவிரம் காட்டி வரும் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் தரப்பை கொதிப்படைய செய்திருக்கிறது. ஆனால் ஓராண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் முன்னாள் அமைச்சர்களை அதில் கவனம் செலுத்த சொல்லி இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.” என்றனர் விரிவாக.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
