‘ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே… ஒன்று தி.மு.க இன்னொன்று த.வெ.க’ என முதல்வர் விஜய் மேடைதோறும் பேசிவந்ததைப் போலவே அமைந்திருக்கின்றன இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்.
மதுராந்தகம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றிருக்கிறார். தாராபுரம் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்க்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா.
எதிர்க்கட்சியான தி.மு.க இரண்டிலும் தோற்றாலும் அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடத்தைத் தட்டிப்பிடித்திருக்கிறது.
நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் களம்கண்ட போதே மதுராந்தகம் தொகுதியில் 2026-ல் மூன்றாமிடம் பிடித்தது தி.மு.க. பின்னர் கூட்டணிக் கட்சிகளெல்லாம் த.வெ.க முகாமுக்குத் தாவிய நிலையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாமிடமே கிடைக்கும் எனக் கருதினோம்.
அதுபோல தாராபுரத்தில் கட்சிக் கட்டமைப்பு வலுவாக இல்லாததோடு கவுண்டர் சமூகத்தினர் நிறைந்து வாழுவதால் அங்கே அ.தி.மு.க வாய்ஸ் இருக்கும் என்றே சொல்லப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் மூன்றாமிடத்தையே பிடிப்போம் என்றுதான் நினைத்தோம்.
அ.தி.மு.க வலுவாக இருக்கும் மதுராந்தகத்தில் அக்கட்சியைப் பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறோம். பட்டியல் சமூகத்தினர், வன்னியர் நிறைந்து வாழும் பகுதிகளில்கூட தி.மு.க-வுக்குக் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
ஓர் இடைத்தேர்தலில் எந்தக் கூட்டணிக் கட்சிகளின் தயவும் இல்லாமல் இரண்டாம் இடத்தையும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது ஆறுதல் தரக்கூடிய செய்தி” என்றனர்.

அரசியல் நோக்கர்கள் சிலரோ “‘கூட்டணிக் கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க இல்லை’ என்ற த.வெ.க-வின் கூர்மையான விமர்சனங்களை உடைத்துவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால் அப்படிச் சொல்லிவிட முடியாது. 2026 பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது தி.மு.க. ஆனால், தற்போது 57 ஆயிரம் வாக்குகளையே பெற்றிருக்கிறது.
மதுராந்தகத்தில் 60 ஆயிரம் வாக்குகள் பெற்ற கட்சி 50 ஆயிரம் வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது. சொல்லப்போனால், கட்சி வாக்குகளையே இழந்திருக்கிறது தி.மு.க. கடந்தமுறை பெற்ற வாக்குகளைப் பெற்றிருந்தால் தி.மு.க வென்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் கோட்டை விட்டிருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மதுராந்தகத்தில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் மரகதம். அங்கு கூட்டணி இல்லாமல்தான் தடுமாறியிருக்கிறது தி.மு.க” என்றனர்.
மதுராந்தகத்தைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகள் இல்லாதது தி.மு.க-வுக்கு மிகப்பெரிய மைனஸ், தாராபுரத்தைப் பொறுத்தவரை 57 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பது தி.மு.க-வுக்கு ஆறுதல்!




