மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஜபி தரிசனம் செய்த அமைச்சர்கள், எம்.பி-கள் குறித்து முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “மதுரை கும்பாபிஷேகத்தில் பல வேலைகள் இருந்ததால் ஏற்பாடுகளை கவனிக்க நாங்கள் விஐபி தரிசன வழியில் சென்றோம். இவர்களுக்கு அடிப்படை அறிவு இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஆப்பிளை ஆப்பிளுடன் ஒப்பிடலாம். ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாது. இவர்களுக்கு ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாது. திருவண்ணாமலை பொது தரிசனம் – மதுரை கும்பாபிஷேகம். இதை எப்படி ஒப்பிட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சேகர் பாபு இன்று திருவண்ணமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் கோயிலுக்குள் ‘ரீல்ஸ்’ எடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். ராஜகோபுரத்தில் காலணியுடன் ஏறிச் செல்வது, முறுக்கு உற்பத்தி நேரத்தைக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடும் அவர்தான் அறிவாளி. இறை தரிசனத்திற்கும் கோபுர தரிசனத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர். ஆனால் எங்களுக்கு புனித நீருக்கும் – சாதாரண அண்டா நீருக்கும் வித்தியாசம் தெரியும். வசதி குறைவானவர் சாப்பிடும் ஆரஞ்சிலும், வசதியானவர் சாப்பிடும் ஆப்பிளிலும் வைட்டமின் சி ஒன்றே.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்களைச் சந்தித்தபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பலருக்குச் சென்றடையவில்லை. மேலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முழுமையாக வேலை வழங்கப்படுவதில்லை. வேலை செய்தாலும் 3 முதல் 4 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சர்க்கரை, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்ந்திருக்கிறது. மாற்றம் மாற்றம் என இதைத்தான் மாற்றமாக அனுபவிக்கிறோம் என மக்கள் பெரும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் தடையை நீக்கியதால் 5 கோயில்களுக்கு யானைகள் வந்துள்ளன. இதற்கும் தவெக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

ஆனால், இதற்கான முதற்கட்டக் கருத்துரையை வழங்கியதே திராவிட மாடல் அரசுதான். திருச்செந்தூர் கட்டண உயர்வு, ஆன்லைன் தரிசனம், செல்போன் கட்டணம் போன்ற தற்போதைய அரசின் திட்டமிடா அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 6000 ஆண்டுகள் பழைமையான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 79 கல்தூண்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டு வீரவசந்தராயர் மண்டபம் கட்டப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.
48 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருக்கும் எங்களை நோக்கி “உன் தந்தையை, தாத்தாவை கூப்பிடு” என்று ஆதவ் அர்ஜுனா பேசுவது அவரது மடமையைக் காட்டுகிறது. 78 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுக பல நெருப்பாறுகளைத் தாண்டி வந்த இயக்கம். எங்களுக்கு சொல்வதற்கு வரலாறு இருக்கிறது. அவரிடம் அப்படி கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? மதுரை குடமுழுக்கு டிக்கெட்டுகளை சினிமா டிக்கெட் போல் கள்ளச்சந்தையில் விற்று மதுரையை நாரடித்தார்கள். ஆணவமும் அகம்பாவமும் கொண்டு பேசுபவர்களுக்கு இயற்கையும் இறைவனும் மக்களும் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.” என்றார்.




