ராணிப்பேட்டை நிகழ்ச்சி ஒன்றில் தனது அம்மா குறித்தும் குடும்பநிலை குறித்தும் கண்கலங்கிய படி பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “நான் ஒன்றும் பெரிய பணக்கார வீட்டு பிள்ளை அல்ல. சாதாரண ஒரு நான்கு, ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்த குடிக்காரன் மகன் தான். நான் எனது வாழ்க்கையில், ஏர் ஓட்டியிருகிறேன், நாத்து நட்டு இருக்கிறேன்.
கத்திரிக்காய் எல்லாம் அறுத்து கொண்டு வந்து வீட்டில் கொட்டி, பெரிய காய்களை மேல் வைத்து, தலையில் சுமந்து கொண்டுபோய் சந்தையில் விற்பேன். மூன்று பம்ப் செட் இருந்தது எங்களிடம். அதற்கு கரண்டு பில் கட்டக் கூட அம்மாவும் நானும் கலங்கி நின்றிருக்கிறோம்.
அப்படிப்பட்ட துரைமுருகன் தான் நான். அதனால் தான் இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் இலவச மின்சாரம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டேன். அப்போது என் கண்கள் கலங்கியது.
கிணற்றில் தண்ணீர் இருந்தால் மட்டும் போதும். இப்போது விவசாயி 10 போர் போட்டாலும் சரி, 25-வது போர் போட்டாலும் சரி. இதற்காக, எத்தனை ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன் படுத்தினாலும் சரி ஒரு ரூபாய் கூட கட்டத் தேவையில்லை. எங்க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு செய்த நல்ல விஷயம் இது” என்று பேசியிருக்கிறார்.