விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், திருவண்ணாமலையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மண்டலக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டு அரசியலில் நாம் குறி வைக்கப்படுகிறோம் என்பதை கட்சியின் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எங்கே இருந்தாலும், அந்த இடத்தில் எப்போதும் நேர்மையாகவே இருந்திருக்கிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியின் முன்னும் பின்னும் வெட்டிவிட்டு, ‘தி.மு.க கூட்டணி தொடர்கிறது’ என்பதை மட்டும் பரப்புகிறார்கள்.
தி.மு.க கூட்டணியில் இருந்தபோது தவெக-வின் அரசியல் மற்றும் கருத்துக்கள் முரணாக இருந்ததால் விமர்சித்தது உண்மைதான்.
ஆனால், ஆட்சி அமைப்பதற்கு நெருக்கடியான ஒரு சூழலில், அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து அவர்கள் நம்முடன் உறவை விரும்பும்போது, நாமும் அந்த உறவைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன அரசியல் பிழை இருக்கிறது?
தி.மு.க தலைமையிலான கூட்டணி ஏன் நிலைக்கவில்லை என்பதை ஒரு சுயவிமர்சனமாக, சிந்தனைக்காக நான் முன்வைக்கிறேன். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மிக வேகமாக அதிலிருந்து வெளியேறி, தவெக-விற்கு ஆதரவு கொடுக்கும் அளவு அந்த உறவு ஏன் கசந்து போனது என்பதை தி.மு.க தலைவர்கள் யோசிக்க வேண்டும்.
நாம் அமைச்சரவையில் சேர்ந்ததால்தான் கூட்டணி முறிந்தது என்று சிலர் கூறுகிறார்கள். நாம் எப்போது வேண்டுமானாலும் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற முடியும். அதில் நமக்கு பெரிய பிடிப்பு இல்லை. ஆனால், “இருக்கிற இடத்தில் விசுவாசமாக இரு” என்று கூறுபவர்கள் நம்மைச் சுதந்திரமாகச் சிந்திக்கவிடாமல், ஒரு அடிமையாகவே பார்க்கிறார்கள்.
பா.ஜ.க-விற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்கிற பார்வையை திருமாவளவன் முன்வைக்கிறான் என்றால், அதை ஏன் யாரும் பாராட்ட மறுக்கிறார்கள்?
நான் மீண்டும் தி.மு.க-வோடு ஒட்டிக்கொள்ளப் பார்க்கிறேன் என்று அர்த்தமற்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தேர்தலுக்காக மோதிக்கொண்டாலும் கூட, பா.ஜ.க உள்ளே நுழைவதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான்.
இன்றைய சூழலில் தி.மு.க தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது, அ.தி.மு.க சிதறிக் கொண்டிருக்கிறது. இதனால் திராவிட மற்றும் பெரியார் அரசியலின் எதிர்காலம் என்னவாகுமோ என்கிற கவலை நமக்கு அதிகரிக்கிறது.
பா.ஜ.க நேரடியாக வந்தால் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது என்பதால், அவர்கள் வேறு முகத்தோடு உள்ளே நுழையப் பார்க்கிறார்கள். ‘வி த லீடர்ஸ்’ என்று புதிதாக கட்சித் தொடங்கும் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவதற்குக் கடிதம் கொடுத்துவிட்டு, டெல்லியில் மோடி, அமித்ஷாவின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தார்.
உலகத்தில் எந்த அரசியல் கட்சியிலாவது விலகல் கடிதத்திற்கு ஒப்புதல் வரக் காத்திருந்த வரலாறு உண்டா? அண்ணாமலை போன்ற ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்கள் வளர்ந்தால், டெல்லியில் கெஜ்ரிவாலுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் நடந்த நிலைதான் தமிழ்நாட்டிற்கும் ஏற்படும். இந்த ஆபத்தை உணர்ந்துதான் நான் காட்டுமன்னார் கோவிலில் நிற்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்.

தற்போது விசிக-வை தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் எதிராக நிறுத்தப் பார்க்கிறார்கள். “அன்புமணி உள்ளே வரப்போகிறார், திருமாவளவன் வெளியே போகப்போகிறார்” என்று வதந்திகளைப் பரப்புகிறார்கள். திருமாவளவன் முன்புபோல ‘ஸ்டெடியா’ இல்லை என்று காட்டி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். ஆனால், எந்த ஒரு சக்தியாலும் திருமாவளவனையோ, விடுதலைச் சிறுத்தைகளையோ அரசியலில் இருந்து வெளியேற்றவோ, பலவீனப்படுத்தவோ முடியாது.
என்னோடு பயணிக்கும் தோழர்கள் என்னை முழுமையாக அறிவார்கள். நாம் எங்கும், எப்போதும் நேர்மையாகவே இருப்போம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.




