21
May, 2026

A News 365Times Venture

21
Thursday
May, 2026

A News 365Times Venture

"ரிசைன் பண்ணிட்டு வரட்டும் பார்க்கலாம்…" – அ.தி.மு.க-வினருக்கு முதல்வர் வைத்த ட்விஸ்ட்!

Date:

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு, வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கிளர்ச்சி செய்துவரும் அந்த எம்.எல்.ஏ-க்கள், விரைவிலேயே பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கவும் ஆயத்தமாகிறார்கள். இந்தச்சூழலில், த.வெ.க அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்தது வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குழு.

விஷ்ணு ரெட்டி

அதைத்தொடர்ந்து, ‘கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு புகாரளித்தது. ஆளுநர் மாளிகையிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், த.வெ.க அமைச்சரவையில் அ.தி.மு.க கிளர்ச்சி எம்.எல்.ஏ-க்களில் சிலர் அமைச்சராவதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்தன.

த.வெ.க தரப்பிலிருந்து, முதல்வர் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டிதான் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றவர்களும் அ.தி.மு.க-வினருடன் பேசிவந்தனர். ஆனால், எதுவும் கைகூடவில்லை என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

அதுகுறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “அ.தி.மு.க-விலிருந்து வருபவர்களுக்கு, ஐந்து எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி விகிதம், 25 எம்.எல்.ஏ-க்களுக்கு ஐந்து அமைச்சர் பதவிகள் தர பேசப்பட்டது. ஆனால், வேலுமணி தரப்பிலிருந்து எட்டு அமைச்சர் பதவிகளும், ஐந்து வாரியத் தலைவர் பதவிகளும் எதிர்பார்த்தனர். அதை த.வெ.க மேலிடம் ஏற்கவில்லை.

இழுத்துக்கொண்டே இருந்த பேச்சுவார்த்தையில், ஏழு அமைச்சர் பதவிகள் வரை தருவதற்கு முன்வந்தது த.வெ.க மேலிடம். வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், மரகதம் வெற்றிவேல் ஆகியோர் அமைச்சர் பதவி ஏற்கவும் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அந்தச் சூழலில், கரூர் தொகுதியில் வெற்றிப்பெற்றிருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். அதனால், அ.தி.மு.க-வினருக்கு எட்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது வேலுமணி தரப்பு. ‘ஐந்து எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை ஒதுக்குகிறீர்கள். எங்களுக்கு எட்டு ஒதுக்க மாட்டீர்களா…’ என்று உரிமையோடு கேள்வியும் கேட்டனர்.

அந்தநிலையில்தான், ‘அ.தி.மு.க., அ.ம.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், குதிரை பேரம் நடந்திருப்பது உர்ஜிதமாகிவிடும். நாங்கள் நிச்சயமாக சி.பி.ஐ விசாரணைக் கேட்போம்’ என்று தடாலடித்தார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

ஆளுநர் மாளிகையிலிருந்தும்கூட, ‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவர்களை அமைச்சராக்குவதில் சில சந்தேகங்கள் எழுகின்றன’ என்று அழுத்தமாகச் சொன்னதால், முதல்வர் குழம்பிவிட்டார். ஆட்சி அமைந்து நாட்கள் பல கடந்தும், முழுவதுமாக அமைச்சரவையை நிரப்ப முடியாமல் முதல்வரும் தடுமாறத் தொடங்கினார்.

இந்த இடியாப்ப சிக்கலுக்கு இடையேதான், ‘அ.தி.மு.க-வினருக்கு அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது’ என்று குண்டை எறிந்தார் முதல்வரின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி.

ஜான் ஆரோக்கியசாமி

தொடக்கத்திலிருந்தே, அ.தி.மு.க-வினரை அமைச்சரவைக்குள் சேர்ப்பதில் ஜான் ஆரோக்கியசாமிக்கு உடன்பாடில்லை. ‘இரண்டு திராவிடக் கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லாமல், ஒரு மாற்றத்திற்காகத்தான் நமக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நாம் பொய்யாக்கிவிடக் கூடாது. அ.தி.மு.க-விலிருந்து வருபவர்களுக்கு நாம் அமைச்சரவையில் இடம் அளிக்கக்கூடாது’ என்று விடாப்பிடியாக அறிவுறுத்தினார். அவரது கருத்தில் முதல்வரும் உடன்பட்டதால்தான், தற்போது நிலைமை முற்றிலுமாக மாறியிருக்கிறது.

‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை ரிசைன் செய்துவிட்டு இடைத்தேர்தலை எதிர்கொள்ளச் சொல்லுங்கள். நம் கட்சியில் இணைந்து விசில் சின்னத்திலேயே அவர்கள் போட்டியிடட்டும். ஜெயித்தபிறகு அமைச்சரவையில் நிச்சயமாக இடமளிப்போம்’ என்று முதல்வர் ஆலோசனை சொல்லவும், ஆடிப்போய்விட்டார்கள் வேலுமணி வகையறாக்கள்.

‘உங்களை நம்பித்தானே ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தோம். இப்படி சொன்னால் எப்படி…’ என்று வேலுமணி தரப்பு சமரசம் பேசியும், த.வெ.க மேலிடம் மசியவில்லை. ஆகவே, நாளை நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்களுக்கு இடமில்லை என்பது தெரிகிறது” என்றனர் விரிவாக.

வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர்

கடைசி முயற்சியாக, முதல்வர் விஜய்யிடம் மீண்டும் பேசும் திட்டத்தில் இருக்கிறார்கள் வேலுமணி தலைமையிலான கிளர்ச்சி எம்.எல்.ஏ-க்கள். “பதவியை ரிசைன் பண்ணிட்டு, மீண்டும் தேர்தலை எதிர்கொள்வதெல்லாம் சாத்தியமே இல்லாத விஷயம். முதல்வரை எப்படியாவது கன்வின்ஸ் செஞ்சால் மட்டுமே நாம தப்பிக்க முடியும்…” என்று பதறியும் போயிருக்கிறார்கள்.

அமைச்சரவை விரிவாக்கத்துக்கான நேரம் நெருங்க, நெருங்க வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினரிடம் டென்ஷன் எகிறிக் கொண்டே போகிறது. முதல்வர் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது நாளை காலையில் தெரிந்துவிடும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அண்ணா சாலை: நடைபாதை ஆக்கிரமிப்பும், அறுந்து கிடக்கும் ஒயர்களும் – சிரமத்தைச் சந்திக்கும் மக்கள்!

சென்னையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றான அண்ணா சாலை,...

`முதல்வர் அறையில் ரீல்ஸ்; விஜய் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்!' – தமிழிசை சௌந்தரராஜன்

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச்...

`தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான் பந்துபோல திமுக Bounce Back ஆகும்!' – ஸ்டாலின்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்...

ஜார்ஜியா மெலோனி: "நீ ரொம்ப குண்டா இருக்க" – அரசியலுக்கு வித்திட்ட அந்த சம்பவம் – சுவாரசிய தகவல்கள்!

இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஜார்ஜியா...